பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு.. கமிஷனர் அலுவலகத்தில் திமுக புகார்..!

By Asianet TamilFirst Published May 26, 2021, 9:06 PM IST
Highlights

சென்னையில் பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என சமூக ஊடங்களில் அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

ஆன்லைனில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு செய்த சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியர் திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்றும், அதனால் அவர் மீது நடவடிக்கை இருக்காது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை திமுக வழக்கறிஞர் அணியின் சூர்யா வெற்றிகொண்டான் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “தற்போது சென்னையில் ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது. இது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகத் தற்போது (பேஸ்புக்) போன்ற சமூக வலைதளங்களில் சில விஷமிகள் இந்த விஷயத்தைப் பற்றியோ அல்லது அதன் மீது காவல்துறை உடனடியாகப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தது குறித்தோ எந்த சிந்தனையும் இல்லாமல் வேண்டுமென்றே திமுக தலைமையிலான தமிழக அரசின் மீதும், திமுகவின் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் சில பொய்த் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக நாராயணன் சேஷாத்திரி என்பவர், கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்குச் சொந்தக்காரர் என்றும், அதனால் இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் என்றும், பொது வெளியில் ஒரு சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) தன்னுடைய கூற்றிற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், தான் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர்க் கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரைக் கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் இதனைப் பதிவிட்டு வருவதால் இந்த அவதூறு பலதரப்பட்டவர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பது பொய். அதேபோல் அப்படி அவர் உறவினர் என்பதால் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் என்பதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்பதும் கீழ்த்தரமான அவதூறு என்பதோடு அல்லாமல், ஆட்சியின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்க கையாளப்படும் உத்தி.
எனவே, மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதனைப் பின்பற்றி சமூக வலைதளங்களில் மீள் பதிவு செய்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்தப் பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!