எங்கு சறுக்கினார் சசிகலா..? அம்போவான அதிமுக கனவு..!

By Ajmal KhanFirst Published Apr 11, 2022, 1:49 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா நீக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக,  அதிமுகவை கைப்பற்ற நினைத்த சசிகலாவின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 

அதிமுக யாருக்கு சொந்தம்?

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனையடுத்து ஆட்சி மற்றும் கட்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தும், அதிமுக சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் சசிகலா உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி சட்ட விரோதம் என்று உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். இதனை எதிர்த்து 
அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரி சசிகலா தொடர்ந்த  வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த  மனுகளை விசாரித்த  சென்னை உரிமையியல் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos

சசிகலாவை நீக்கியது சரிதான்-நீதிமன்றம்

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஶ்ரீதேவி, சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என கூறியுள்ளார். சசிகலா தொடர்ந்த வழக்கையும்  தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். இதன் காரணமாக சட்ட ரீதியாக அதிமுகவை கைப்பற்றி விடலாம் என நினைத்திருந்த சசிகலாவிற்கு நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் சசிகலா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கில்  மேல் முறையீடு செய்யலாமா? அல்லது வேண்டாமா ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அதிமுக நிர்வாகிகள் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லையென கூறியுள்ளனர். தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு மூலம்  சட்ட ரீதியாக அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சசிகலாவின் அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாக மாறிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா அதிமுக கனவு ?

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது  அதிமுகவிற்கு போட்டியாக அமமுகவில் இணைந்து தேர்தலை சசிகலா எதிர்கொண்டிருந்தால் குறைந்த பட்சம் 10 % சதவிகித வாக்குகளை  பெற வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் சசிகலாவோ மயிலே மயிலே இறகு போடு என்ற ரீதியில் காத்திருந்ததாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். தற்போது சசிகலாவிற்கு அதிமுகவை கைப்பற்ற எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா  வெளிப்படையாக தொண்டர்களை சந்தித்து  ஆதரவை பெற்றால் தான் அதிமுகவில் சசிகலாவின் எதிர்காலம் என்னவென்று தெரியவரும் என மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார். சசிகலா அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க அதிமுக மூத்த நிர்வாகிகள்  நினைத்தால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சசிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தலைமையேற்று வழிநடத்துவாரா? அல்லது தற்போது உள்ளது போல் அமைதி காப்பார? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

click me!