
நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு :
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. Common University Entrance Test (CUET) என்ற இந்த தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் :
இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன் மொழிந்தார். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மூலம் தான் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் சேர்க்கையை குறைக்கும் என்றும் பயிற்சி மையங்களில் புற்றீசல்போல உருவாகும் அபாயம் இருக்கிறது என்றும் ஸ்டாலின் தனது உரையின் போது தெரிவித்தார்.
தீர்மானம் நிறைவேற்றம் :
இந்த சூழலில் மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிராக எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு ஏழை எளிய மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று அதிமுக எம்எல்ஏ கே.பி அன்பழகன் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சியூஇடி நுழைவுத் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதன் மூலம் இளநிலை படிப்பு களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை வைப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சியூஇடி நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.