ஆண்மை இருந்தால் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு எதிராக ஸ்டாலின் சர்ச்சை பேச்சு..!

By vinoth kumarFirst Published Dec 5, 2020, 6:41 PM IST
Highlights

திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆர்ப்பாட்டத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசுகையில்;-  தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. ஏழைத்தாயின் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி கொண்டு வந்த இந்த சட்டத்தை தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிக்கிறார். இது தான் கொடுமையிலும் கொடுமை.

விவசாயிகள் டெல்லி சாலைகளில் போராடிக் கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களால் நன்மைகள் இருக்கின்றன என்று வானொலியில் பேசிக்கொண்டிருக்கிறார். குறைந்த பட்ச ஆதார விலை என்று இந்த கட்டத்தில் ஒரு வார்த்தை இருக்கிறதா எனக்கு எடுத்துக் காட்டுங்கள். ‌விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். விவசாயிகளின் தற்கொலையை தடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் விவசாயிகளின் இருந்த வருமானமும் போய்விட்டது. கடந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் மத்திய அரசு நீதிமன்றத்தில் அதற்கு எதிராக கருத்து தெரிவித்தது. இப்படி மோடியின் வார்த்தைகள் எதுவும் நம்பும்படியாக இல்லை.

ஒருபக்கம் மத்திய அரசு என்றால், மறுபக்கம் மாநில அரசு, தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு விவசாயிகளின் வாழ்வாதரத்தை சூறையாடும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து பச்சைத் தூரோகம் செய்திருக்கிறது. “நானும் ரவுடி தான்; நானும் ரவுடி தான்” என்பது போல், “நானும் விவசாயி தான்; நானும் விவசாயி தான் என புலம்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் விவசாயி அல்ல வேடதாரி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் விவசாயிகளுக்கும் பயனில்லை; மக்களுக்கும் பயனில்லை. அதனால்தான் விவசாயிகளையும், மண்ணையும் காக்க தி.மு.க களம் இறங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது, டெல்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகளை ’சேலத்து விஞ்ஞானி’ எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக கொச்சைப்படுத்துகிறார். விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக டெல்லி சென்று விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி கூறமுடியுமா?.

நேருக்கு நேர் விவாதிக்க ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா?, ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை. அப்படி தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ஆண்மை இருப்பது உண்மை, என்றால் ஆ.ராசாவிடம் தேதி குறியுங்கள்; வரத்தயார் என ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். 

click me!