அதிமுகவில் சீனியர்களைத் தவிர்த்து இளையவரான ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்திருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் சீனியர்களைத் தவிர்த்து இளையவரான ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்திருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்றுவிட்டார். பொதுச்செயலாளர் பதவியேற்றவுடன் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் ஓபிஎஸ்ஸின் மூத்த மகனும் தேனி எம்.பி.யுமான ஓ.பி. ரவீந்திரநாத், இளைய மகன் ஜெயபிரதீப் உள்பட 17 பேரை கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 22 பேரை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையும் படிங்க;- அதிமுகவில் சாமானிய தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம்... அதற்கு நானே சாட்சி... ஆர்.பி. உதயகுமார் கருத்து!!
அதன் தொடர்ச்சியாக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 21 பேரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். அதே வேளையில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 22 பேரை கட்சியிலிருந்து நீக்கி ஓ. பன்னீர்செல்வமும் அறிவிப்பு வெளியிட்டார். இருவரும் மாறி மாறி நீக்கிக்கொண்டிருந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்தும் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அந்தப் பதவிக்கு நியமித்தும் எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தியிருக்கிறார். அதிமுகவில் உள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மட்டுமே தனித்து இருக்கிறார்கள்.
இவர்களை அதிமுகவிலிருந்து நீக்கி ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் இபிஎஸ் வேட்டு வைத்திருக்கிறார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றோர் பெயர் பரிசீலிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஏனெனில், ஓபிஎஸ் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்தவரே நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருந்தன. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமித்தால் தென் மாவட்டங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.
இதையும் படிங்க;- எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செல்லாது..! இபிஎஸ்க்கு செக் வைத்த ஓபிஎஸ் அணி
ஆனால், தற்போது சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதனை தவிர்த்து அதே சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி. உதயகுமாரை எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். ஓபிஎஸ் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி நத்தம் விஸ்வநாதனுக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கியுள்ளார் இபிஎஸ். ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சார்ந்த் சமுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை இபிஎஸ் வழங்கி, ஓபிஎஸ் நீக்கக் கணக்கை நேர் செய்ய முயற்சித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அலை வீசியபோதும் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தன்னுடைய மகன் ரவீந்திரநாத்தை தேர்தலில் நிறுத்தும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. திமுக சார்பில் பலமான தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்படலாம். ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால், இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதன் மூலமே அதை நடத்திக் காட்ட வேண்டி வரும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவிந்திரநாத்துக்காக தேர்தல் பணியாற்றினார் ஆர்.பி. உதயகுமார். அவருடைய அந்தப் பணி 2024 தேர்தலுக்கு உதவலாம். மேலும் சொல்லக்கூடிய விஷங்களை அழுத்தம் திருத்தமாகப் பேசக்கூடியவர் ஆர்.பி. உதயகுமார். இதுவும் சட்டப்பேரவையில் உதவும் என்பதால் கூட்டிக் கழித்துதான் அவரை இபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக்கி இருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவில்.