
வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள பாமக பொதுக்குழுவில் டாக்டர்.ராமதாஸ் அதிர்ச்சி முடிவை வெளியிடப்போவதாகவும், இதனால், தைலாபுரம் குடும்பத்தில் இன்னும் சண்டை கடுமையாக நடக்கலாம், அதன் விளைவுகள் மோசமாக இருக்கலாம். பிரச்சினை எப்படி போய் முடியப்போகிறதோ தெரியவில்லை என்கிறார்கள் தைலாபுரத்திற்கு நெருக்கமானவர்கள்.
பாமகவின் பொதுக்குழுவை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் அன்புமணி. அதேவேளை வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார் ராமதாஸ். இருதரப்பிலும் தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல். கட்சியின் நிறுவனரான ராமதாஸ், கட்சியின் தலைவரும், தனது மகனுமான அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்ததோடு அவரை செயல் தலைவராக அறிவித்து, கூட்டணி தொடர்பான முடிவை நான் தான் எடுப்பேன் எனக் கூறினார். அதற்குப் பிறகு தற்போது வரை பாமகவில் பல்வேறு விவகாரங்கள் அரங்கேறி விட்டன.
அன்புமணி ஆதரவு நிர்வாகிகளான பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பேரவை பாலு ஆகியோரை நீக்கியதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அவர்கள் அனைவரும் பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டார். 150-க்கும் மேற்பட்ட பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பிற நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளையும் ராமதாஸ் அறிவித்தார். ஆனால் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர். நான் நியமித்த அனைவரும் தொடர்கின்றனர் என அறிக்கை வெளியிட்டார் அன்புமணி.
அதற்கு பிறகு தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணி பொதுக்குழு தேதியை அறிவித்தார். ராமதாஸ் அதற்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் 100 நாள் சுற்றுப்பயணத்தையும் அன்புமணி தொடங்கினார். ஆனால், நிறுவனரின் அனுமதி இன்றி பொதுக்குழுவுக்கும், சுற்று பயணத்திற்கும் அனுமதி தரக்கூடாது என்ற ராமதாஸின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் அன்புமணி வெற்றி பெற்று மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக பாமக பொதுக்குழு அரங்கேறியது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தான் தலைவர் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே நேற்று பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டை நடத்தினார் ராமதாஸ். பாமக பொதுக்குழுவில் ராமதாஸின் புகைப்படங்கள் இடம் பெற்றதோடு அவருக்கென தனி இருக்கை அமைக்கப்பட்டது. ஆனால், ராமதாஸ் நடத்திய மாநாட்டில் அன்புமணியின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. பதிலுக்கு ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் புகைப்படங்கள் இடம் பெற்றது. மேடையிலும் ஒரு தீர்மானத்தை வாசித்தார் ராமதாஸின் மகள் காந்திமதி. பாமக பொதுக்குழு கூட்டம் இப்படி இரு தரப்பும் மாநாடு பொதுக்குழு கூட்டம் என இருக்கும் நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என தவித்து கிடக்கிறார்கள் பாமக தொண்டர்கள்.
வரும் 17ஆம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி தேர்தல் ஆணையத்துக்கு அந்த தீர்மானங்களை அனுப்ப இருக்கிறார். ராமதாஸ் நியமித்த நிர்வாகிகள் அனைவருமே கடந்த சில வாரங்களுக்குள் நியமிக்கப்பட்டவர்கள். ஆனால் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைந்து நியமிக்கப்பட்டவர்கள்.
பாமக பாமக வீதி 161-ன் படி தலைவர், பொதுச் செயலாளர் இல்லாமல் எந்த நிகழ்வையும் நடத்த முடியாது எனும் அன்புமணி தரப்பு ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டினாலும் அது செல்லாது எனவும், அன்புமணி தரப்பே உண்மையான பாமக என்கிறது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எங்கு சென்றாலும், அன்புமணி தரப்பு தான் வெற்றி பெறும் என்கின்றனர். பாமகவில் இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன? என ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘‘ஆகஸ்ட் -17ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி மகன்களான முகுந்தன் மீண்டும் இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட உள்ளார். அத்தோடு முகுந்தனின் இன்னொரு உடன் பிறந்த சகோதரரான சுகந்தனுக்கும் முக்கியப் பொறுப்பை அறிவிக்கப் போகிறார் ராமதாஸ். கொஞ்ச நாளைக்கு முன்பு காந்திமதியை மேடையில் உட்கார வைத்திருந்தார் ராமதாஸ். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘போகப் போகத் தெரியும்..” எனப் பாட்டுப்பாடி கலகலப்பூட்டினார். அதற்கு அர்த்தம் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி. சுகந்தனுக்கு முக்கிய பதவி கொடுக்கப் போகிறார்.
‘‘அன்புமணி உனது மனைவிக்கு எம்.பி சீட் கொடுத்தாய். உன் மகள்களை மேடையில் ஏற்றி வைத்து மாநாடு நடத்தினாய். நான் முகுந்தன், சுகந்தனை பொறுப்புக்கு கொண்டு வருகிறேன்’’ என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதனால் குடும்பத்தில் இன்னும் சண்டை கடுமையாக நடக்கலாம், அதன் விளைவுகள் மோசமாக இருக்கலாம். பிரச்சினை எப்படி போய் முடியும் என்பதே தெரியாது’ என்கிறார்கள் ராமதாஸின் செயல்பாட்டை அறிந்தவர்கள்.