
சன் டிவி நெட்வொர்க் லிமிடெட், இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கலாநிதி மாறனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை அவரது இளைய சகோதரரும், திமுக எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுள்ளதாகவும், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தயாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மற்றும் ஆறு பேருக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு நடந்த பங்கு பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட தகராறு குறித்து சட்டப்படிநோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, நோட்டீஸில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சன் டிவி மறுத்து இருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் தரப்பில் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டதாகவும், வழக்கை தயாநிதிமாறன் திரும்பப்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறது சன் டிவி. இதற்காக ஆரம்பம் முதலே கலாநிதி மாறனுக்கு அனைத்து வழிகளிலும் மிக உறுதுணையாகவும், தூணாகவும் இருந்து வந்தவர் அவரது தம்பி தயாநிதிமாறன்தான். சுமங்கலி கேபிள் விஷன் மூலமாக கலாநிதிக்கு வருமானம் கொட்டியது.
மாறன் பிரதர்ஸின் சாம்ராஜ்யத்திற்கு வேராக இருந்தது எஸ்.சி.வி. தமிழகத்தில் யார் சேனல் ஆரம்பித்தாலும் எஸ்விசி மூலம்தான் வீடுகளுக்கு சேனல் நுழைய முடியும். அப்போது அந்தநிலைதான் இருந்து வந்தது. சன் டிவி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததற்கும், கோலோச்சுவதற்கும் இதுதான் முக்கிய காரணம். மாறன் பிரதர்ஸ் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆனதும் இந்த கேபிள் மூலம்தான்.
இப்போது கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். ‘‘கலாநிதி மாறன் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யம் நடத்துவதற்கும், சன் டிவி நம்பர் ஒன் ஆனதற்கும் நான்தான் முக்கிய காரணம். எனக்கும் பங்கு இருக்கிறது’’ என தயாநிதி மாறன் பங்கு கேட்க ஆரம்பித்தார்.
இந்த விவகாரம் 2000 ஆண்டிலேயே தொடங்கி விட்டது. அப்போது முதல் செலவுக்கு ஏதாவது தருகிறோம் என்று சொல்லி தயாநிதியை சமாளித்து வந்தார் கலாநிதி. அதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளாமல் மறுத்து வந்தார் தயாநிதி. அண்ணனோ பிடிகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த தயாநிதி பெரும் தொகை கேட்டு கலாநிதி மாறன் மீது வழக்கு கொடுத்தார்.
அத்தோடு சட்டத்தை மீறி வசூல் செய்துள்ளதாக 2003ல் கலாநிதி மாறன் மீது குற்றம் சாட்டினார் தயாநிதி மாறன். அவரைச் சமாளிக்க 50 அல்லது 100 கோடியாவது கொடுத்து தயாநிதியை கழட்டி விடலாம் என கலாநிதி முடிவு செய்ததாகவும் அதற்கு தயாநிதிமாறன் பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
கலாநிதிக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? எப்படி வந்தது? எல்லாம் தெரியும் என்பதால் தயாநிதி பிடிகொடுக்காததால் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த தயாநிதி, கலாநிதிமாறன் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்த விவகாரம் திமுகவை பாதிக்கும் என்பதால் ஸ்டாலின் களத்தில் இறங்கி பஞ்சாயத்து செய்ய முயற்சித்த்தார். காரணம், அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நேரத்தில், பாஜக இந்த விவகாரத்தில் பழைய பிரச்சினைகளை கிளப்பி பூதாகரமாக்கி சிக்கலை உருவாக்கி விடக்கூடாது என பயந்த முதல்வர் மு.க ஸ்டாலினே மும்மரமாக பஞ்சாயத்தை முடித்து வைக்க முயன்றார். ஆனாலும், மாறன் பிரதர்ஸ் இடையே மு.க.ஸ்டாலின் பேச்சு வார்த்தை எடுபடவில்லை என்று கூறப்படுகிறது.
இறுதியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, இந்து என்.ராம் ஆகியோர் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது.இந்து என்.ராம், கலாநிதி மாறனின் மனைவி காவிரியின் உறவினர். இவர்கள் தலையிட்டதால் இப்போது மாறன் பிரதர்ஸ் பஞ்சாயத்து சுமூகமான சூழலுக்கு வந்துள்ளது.
பஞ்சாயத்தின் ஆரம்பத்தில் 100 கோடி ரூபாய் வரை கொடுக்க கலாநிதிமாறன் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால், அதை ஏற்றுக்கொள்ள தயாநிதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ‘‘குறைந்தது 1,500 கோடியாவது தரவேண்டும். 50,000 கோடி சொத்து வைத்திருக்கிறீர்கள். சுமங்கலி கேபிளில் நான்தான் தூண். ஆகையால் 1,500 கோடியாவது தர வேண்டும். அதற்கு குறைவாக வாங்க முடியாது’’ என தயாநிதி அடம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இறுதியில் 8,00 கோடி பணமும், சென்னையின் விலையுயர்ந்த பகுதியான போர்ட் கிளப் ஏரியாவில் 200 கோடி மதிப்புள்ள நிலத்தையும் தயாநிதிக்கு கொடுப்பதாக கலாநிதி மாறன் ஒப்புக் கொண்டதாகவும், இதனால் இந்த பஞ்சாயத்து சுமூகமாக முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையொட்டியே தயாநிதிமாறன், கலாநிதிமாறனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றதாக சன் டிவி நெட்வொர்க் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.