
Voter List Fraud Mk stalin : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள 10-15 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும் 1,00,250 போலி வாக்குகள் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் தெரிவித்தார். அடுத்தாக மகாராஷ்டிராவில் 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும், பீகாரில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து "வாக்கு திருட்டில்" ஈடுபட்டதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்திய கூட்டணி எம்பிக்கள் சார்பில் இன்று டெல்லியில் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கூட்டணி எம்பிக்கள் பேரணி
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி எந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருட திட்டமிட்ட சதி என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தியால் சமர்ப்பிக்கப்பட்ட வாக்கு திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று, ராகுல் காந்தி தலைமையில் இந்திய கூட்டணி MP-களை நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பேரணியாக வழிநடத்துகிறார். இதில் நாங்களும் பங்கேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும், அரசியல் ரீதியாக இயக்கப்படும் நீக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து முழுமையான விசாரணைநடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.