
இனி ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்பதால் கிடைத்தவரை சுருட்ட தொழில் நிறுவனங்களை குறி வைக்கும் ஆட்சியாளர்களால் இடம் பெயரும் ஆலைகளால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;
விருந்தினர்களை வரவேற்று உபசரிக்காத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. தமிழகத்தில் தொழில் செய்வது கடினமாக மாறி வருவதாகக் குற்றஞ்சாட்டி திருப்பூரில் உள்ள ஏராளமான துணி ஆலைகள் ஒதிஷா மாநிலத்திற்கு இடம் பெயர முடிவு செய்திருக்கின்றன.
தொழில்த் துறையைப் பொறுத்தவரை தமிழகத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜவுளித்துறைக்கென தனியான கொள்கை கூட இல்லை என்பது தான் கொடுமை. கடந்த 5 ஆண்டுகளில் ஜவுளித்துறையின் முன்னேற்றத்திற்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட ஜவுளிப் பூங்கா திட்டங்களை செயல்படுத்துவதற்குக் கூட மாநில அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த உற்பத்திக்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவது ஜவுளித்துறை தான். திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.35,000 கோடி மதிப்புள்ள ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஜவுளி ஆலைகள் தான் தரமான வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தமிழகத்தின் காமதேனுவாக திகழும் ஜவுளி ஆலைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
ஆனால், தமிழக அரசோ மற்ற தொழில் நிறுவனங்களைப் போலவே துணி ஆலைகளையும் பணம் பறிக்கும் ஆதாரங்களாக பார்த்ததன் விளைவாகவே அவை திருப்பூரிலிருந்து வெளியேறி ஒதிஷாவின் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.
தமிழகத்திலிருந்து அண்மைக்காலத்தில் தொழில் நிறுவனங்கள் வெளியேறுவது ஒன்றும் புதிதல்ல. சென்னை அருகே ரூ.10,000 கோடியில் மகிழுந்து ஆலை அமைக்க திட்டமிட்டிருந்த கியா மோட்டார்ஸ் நிறுவனமும், நெல்லையில் அறிவுசார் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க முடிவு செய்திருந்த சிண்டெல் நிறுவனமும் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட அளவுக்கு கையூட்டு தர முடியாமல் வெளியேறின.
இவை மட்டுமின்றி, ஏற்கனவே தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைத்துள்ள அசோக் லேலண்ட், ஃபோர்டு, எம்.ஆர்.எஃப் டயர்ஸ், செயின்ட் கோபைன் கண்ணாடி நிறுவனம் ஆகியவை தமிழகத்தில் தங்களின் தொழிற்சாலைகளை விரிவாக்கும் திட்டத்தை கைவிட்டு, வெளிமாநிலங்களில் முதலீடு செய்துள்ளன.
தமிழகத்தில் தொழில் செய்வது மிகவும் சவாலான ஒன்றாக மாறி வருகிறது. தமிழகத்தில் நிலைமை மேம்பட வேண்டும். எங்கள் குழுமத்தின் சார்பில் தமிழகத்தில் நாங்கள் செய்யும் தொழில் மற்றும் எங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து விட்டது என்று முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் வெள்ளையன் அண்மையில் கூறியிருந்தார்.
தமிழகம் தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்ற தகுதியை வேகமாக இழந்து வருகிறது என்பதற்கு முருகப்பா குழும அதிபர் வெள்ளையனின் வாக்குமூலத்தை விட வேறு சிறந்த உதாரணம் எதுவும் தேவையில்லை.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், காண்பதில் எல்லாம் ஊழல், தொட்டதில் எல்லாம் ஊழல் என தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவது தான் இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும்.
தமிழகத்தில் இனியும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கூட்டம் அரக்கத்தனமாக ஊழல் செய்து குவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழகம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணமான பினாமி ஊழல்வாதிகளுக்கு மறக்க முடியாத தண்டனை வழங்கும் நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.