இப்படி உயர்த்துவது நியாயமா? தமிழக அரசு ரூ.100 மானியம் தர வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Aug 17, 2021, 11:34 AM IST
Highlights

கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து  ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிக்க வேண்டு என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்து, 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்!

கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து  ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

click me!