சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்து, தகுதியும், திறமையும் கொண்ட ஒருவரை சட்டப்பேரவையின் புதிய செயலாளராக நியமிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.
பணிநீட்டிப்பு-ராமதாஸ் கண்டனம்
தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் கூடிய மூன்றாண்டு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பதவிக் காலம் முடிவடைந்த ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்பதை அறிந்தும் பேரவைச் செயலகம் இதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
undefined
தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளராக 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் நாள் நியமிக்கப்பட்ட கே.சீனிவாசன் அவர்களுக்கு 60 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சட்டப்பேரவையின் புதிய செயலாளராக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் நிலவி வந்த நிலையில்,
நேற்றிரவு சீனிவாசனின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்திருக்கிறது. இது சட்டவிரோதமானது; இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பும், பதவி உயர்வும் வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? என்றால், நிச்சயமாக உண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் இத்தகைய பணி நீட்டிப்புகளும், பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என்றால், அதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். ஓய்வு பெறும் நிலையில் இருப்பவரின் இடத்தை நிரப்ப தகுதியாக ஆட்கள் இல்லை என்றால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை நியாயப்படுத்த முடியும்.
ஆனால், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அத்தகைய தனிச்சிறப்பு கொண்டவர் அல்ல. அவரது இடத்தை நிரப்ப அவரை விட தகுதியானவர்கள் உள்ளனர். 2018-ஆம் ஆண்டில் சீனிவாசன் செயலராக நியமிக்கப்பட்ட போதே, அவருக்கு அதற்கான தகுதி இல்லை. அவரை விட கூடுதல் தகுதி கொண்ட கூடுதல் செயலாளர் வசந்தி மலர், இணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோரில் ஒருவர் தான் சட்டப் பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அவர்களின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன், பேரவைத் தலைவரின் மனம் குளிரும்படி நடந்து கொண்டதால், அவருக்கு விதிமுறைகளை மீறி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைச் செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட வசந்திமலர், சுப்பிரமணியன் ஆகியோர் இப்போதும் முறையே சிறப்பு செயலாளர், கூடுதல் செயலாளர் பதவிகளில் நீடிக்கின்றனர். அவர்கள் தவிர இணைச் செயலாளர் நிலையில் உள்ள 7 பேரில் மூத்தவரான சாந்தியும் செயலாளராக நியமிக்கப்பட தகுதியானவர் ஆவார். ஆனால், அவர்களை புறந்தள்ளிவிட்டு சீனிவாசனுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதால், அவரை விட கூடுதல் தகுதியும், பணி மூப்பும் கொண்ட வசந்திமலர், சுப்பிரமணியன் ஆகியோர் செயலாளராகும் வாய்ப்பு சட்டவிரோதமாக பறிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைச் செயலாளராக விதிகளை மீறி சீனிவாசன் நியமிக்கப்பட்ட போது அதை நான் கடுமையாக விமர்சித்தேன். அதைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களும் கடுமையாக கண்டித்தார்.
‘‘சட்டப்பேரவைத் தலைவருக்கு சீனிவாசன் மிகவும் வேண்டியவர் என்பதால் அவர் விரும்புகிறார் என்பதற்காக, விதிகளின் முதுகெலும்பை நிச்சயம் உடைக்க முடியாது. சட்டப்பேரவை அலுவலகம் ஒன்றும் தனியாருக்குச் சொந்தமான அலுவலகம் கிடையாது. பொது அலுவலகம். பேரவைத் தலைவரிடம் பணியாற்றுகிறார் என்பதற்காக, பேரவைச் செயலகத்தில் செயலாளர் பதவிக்கு, தகுதி உள்ளவர்களையெல்லாம் புறக்கணித்து, ஒரு நியமனத்தை செய்துவிட முடியாது. இதுபோன்ற விதிகளை அப்பட்டமாக மீறிய சட்டத்திற்குப் புறம்பான நியமனம் சட்டப்பேரவைச் செயலகத்தின் நிர்வாகத்தை முடக்கி, அதன்மீது கறை படியச் செய்துவிடும்’’ என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அப்போது எதையெல்லாம் தவறு என்று ஸ்டாலின் கூறியிருந்தாரோ, அதே தவறுகள் தான் இப்போது மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை போயிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானால் ஒரு பேச்சா?
சட்டப்பேரவைச் செயலாளராக பணியாற்றுபவர்கள் ஆளுங்கட்சியினருக்கு இணக்கமாக நடந்து கொண்டால், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது காலம் காலமாக வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் ராஜாராமன், செல்வராஜ், ஜமாலுதீன் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதால் அவர்களுக்கு அடுத்த படியாக அப்பதவிக்கு வர வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டனர். அதே தவறை இப்போது திமுக அரசும் செய்யக்கூடாது. சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்து, தகுதியும், திறமையும் கொண்ட ஒருவரை சட்டப்பேரவையின் புதிய செயலாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
5 மாநில சட்டமன்ற தேர்தலில் எத்தனை மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றும்.? ஈவிகேஎஸ் ஆரூடம்