
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆளும் திமுகவுக்கு நான்கு இடங்களும், எதிா்க்கட்சியான அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். இதன்படி, திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக, காங்கிரஸ் சாா்பில் வேட்பாளா் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவைத் தேர்தலை நடத்தும் பணிகளை சட்டப் பேரவைச் செயலகம் மேற்கொள்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக, பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன் இந்தியத் தோதல் ஆணைய அதிகாரிகள் காணொலி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையின் போது, மாநிலங்களவைத் தேர்தலுக்கான விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதனிடையே, தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 31ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 6 இடங்களில், 4 இடங்கள் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளன. இதில் திமுகவின் 3 இடங்களுக்கான வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு இடத்தை காங்கிரசுக்கு திமுக வழங்கியுள்ளது.இந்த ஒரு இடத்துக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சியும், 2 இடங்களுக்கான வேட்பாளர்களை அதிமுகவும் இதுவரை அறிவிக்கவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஓபிஎஸ் சம்மதம் தெரிவிக்காததால் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அதேபோல, காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் அல்லது சசிகாந்த் செந்தில் பெயர் பரிசீலனையில் உள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, ‘ முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அலுவலகத்திலும் சிபிஐ சோதனையிடுவது பழிவாங்கும் நடவடிக்கை. பொது வாழ்வில் ப.சிதம்பரத்தை போன்று நேர்மை, நாணயமிக்க அரசியல்வாதிகளை தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். அவருடைய காலத்தில் இந்த தேசத் துக்காக அதிகமாக உழைத்திருக்கிறார். பொருளாதார சிந்தனைகள் அவரிடம் இருந்து வந்தவைதான். மன்மோகன் சிங்கும், அவரும் சேர்ந்துதான் இந்தியாவின் வறுமையை ஒழிப்பதில் மிகப் பெரிய பங்கு வகித்தார்கள்.
கிராமப் புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் என்பது அவரது காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டம் அவர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது புகழை, பெருமையை குலைக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசாங்கம் கீழ்த்தரமான வேலையை செய்கிறது. எத்தனை முறை அவரது வீட்டில் சோதனையிடுவீர்கள். என்ன சோதனை செய்தோம், என்ன கிடைத்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன என்று சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல்.
எனவே, மத்திய அரசை நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம். இது ஒரு நேர்மையற்ற செயல். மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக ஆளுநர் கொண்டு வர வேண்டாம். இங்கு தமிழ் உயிர் வாழ்வதற்கு எங்களுக்கு வழிவிட்டாலே போதும். சிதைப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் இறங்க வேண்டாம் என்பது தான் எங்களது வேண்டுகோள். மாநிலங்களவை எம்.பி. பதவிக் காக நான் யாருக்கும் கோரிக்கை வைக்கவில்லை. ப.சிதம்பரத்துக்கு அந்த பதவியை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என்று கூறி உறுதிப்படுத்தியுள்ளார் கே.எஸ் அழகிரி.
இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !