மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அதிமுக, காங்கிரஸில் குழப்பம்.. தாமதத்துக்கு என்ன காரணம்.?

By Asianet TamilFirst Published May 24, 2022, 9:09 AM IST
Highlights

இப்படி இரண்டு பதவிகளுக்கு பலரும் முட்டி மோதுவதால், இதில் ஒருவரை அறிவித்தாலும் இன்னொருவர் சங்கடப்படுவார் என்பதால், சமாதானப்படுத்தும் முயற்சிகளை அதிமுக தலைமை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் அதிமுகவும் காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளன.

மாநிலங்களவைக்கு 15 மாநிலங்களில் 57 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 10-இல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் 159 இடங்கள் திமுக கூட்டணிக்கு இருப்பதால் தேர்தலில் அக்கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைப்பது உறுதி. இதில் ஓரிடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துவிட்டது.

அதிமுகவுக்கு இரண்டு எம்.பி.க்கள் கிடைப்பதும் உறுதியாகிவிட்டது. அக்கூட்டணிக்கு பாமக ஆதரவுடன் 75 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால், அதிமுக இரண்டு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கிவிட்ட நிலையில் அதிமுகவும் காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ப. சிதம்பரத்துக்கு அந்த இடத்தை ஒதுக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைமை ப. சிதம்பரத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த ஓரிடத்தைப் பிடிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுவும் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கலாமா என்ற ஆலோசனையும் காங்கிரஸில் நடப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. அப்படி முடிவு செய்தால், காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற குரல்களும் சத்தியமூர்த்தி பவனில் கேட்கிறது. இதுபோன்ற எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியில் ஓடிக்கொண்டிருப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் வடக்கு மண்டலத்துக்கும் தெற்கு மண்டலத்துக்கும் எம்.பி. பதவியை ஒதுக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், வடக்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் அந்தப் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களுக்கோ அல்லது தங்களுடைய ஆதரவாளருக்கோ என்ற அடிப்படையில் பதவியைப் பிடிக்க ஜெயக்குமார் - சி.வி.சண்முகம் இதில் முன்னணியில் இருக்கின்றனர். 

தெற்கு மண்டலத்தில் ராஜன் செல்லப்பா மகன் தன்னுடைய மகனுக்கும், மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வாய்ப்பு கேட்டு தளவாய் சுந்தரம் போன்றவர்கள் ஓபிஎஸ்ஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி இரண்டு பதவிகளுக்கு பலரும் முட்டி மோதுவதால், இதில் ஒருவரை அறிவித்தாலும் இன்னொருவர் சங்கடப்படுவார் என்பதால், சமாதானப்படுத்தும் முயற்சிகளை அதிமுக தலைமை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதெல்லாம் முடிந்த பிறகுதான் அதிமுக தலைமை வேட்பாளரை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிவிட்ட நிலையில் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் அதிமுகவும் காங்கிரஸும் குழப்பத்தில் இருப்பது மட்டும் தெளிவாகியுள்ளது.   

click me!