
ரஜினி அரசியல் பிரவேச அறிவிப்பை அடுத்து, ரஜினி மன்றங்களில் இருந்து திமுகவினர் வெளியேறுவார்கள் என்று சைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதற்கட்டமாக ரசிகர்களை மன்றத்தின் மூலம் ஒருங்கிணைக்கும்படி ரஜினி கேட்டுக் கொண்டார். இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ரசிகர்கள், பல கட்சிகளில் இருந்து வருகின்றனர். ரஜினி தனிக்கட்சி ஆரம்பபிப்பதை அடுத்து, பல்வேறு கட்சிகளின் ஓட்டுக்களைப் பிரிப்பார் என்று கூறப்பட்டது. திமுகவின் ஓட்டும், ரஜினி சார்பாக சென்று விடும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், ரஜினி ரசிகர் மன்றங்களில் இருந்து திமுகவினர் வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, ரஜினி ரசிகர்கள் திமுகவில் இருக்கலாம். கொள்கைவேறு, சினிமா வேறு என்பதை எங்கள் தொண்டர்கள் அறிந்து உள்ளனர் என்றார். ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்திருப்பதன் மூலம், எங்கள் தொண்டர்கள் ரஜினி ரசிகர்கள் மன்றங்களில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.