
ஆன்மிக அரசியலை தமிழகத்தில் கொண்டு வரப் போவதாக ரஜினி அறிவித்தாலும் அறிவித்தார், தமிழகத்தின் லெட்டர்பேட் கட்சிகள், சமூக வலைத்தள போராளிகள் என பலரும் தங்கள் விமர்சனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆன்மிக அரசியலுக்கு அஸ்திவாரம் போடும் விதமாக ரஜினி சில சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தாமரை மலரை ஆன்மிக அம்சத்தில் முக்கியமானதாகக் கருதுவார்கள். காரணம், தண்டு நீருக்குள் இருக்கும். இலை நீர் மட்டத்தில் இருக்கும். நீரின் அளவுக்கு தண்டு மாறிக் கொள்ளும். அதன் மலர் மொட்டாகி, சூரியனின் உதயத்தில் ஒளி பட்டதும் இதழ்களை விரித்து மலரும். தாமரை மலருக்கு ஆன்மிகத்தில் பெரும் பங்குண்டு. தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் லட்சுமி, இறைவியர் உருவங்களை வழிபடுதல் மரபு. இந்தியாவில் தாமரை மலர் தாங்கிய நாணயங்கள் பிரபலம். அவற்றை வைத்து பூஜை செய்வது பாரம்பரியப் பழக்கம்.
இந்தத் தாமரை மலரைத்தான், பாஜக., தனது சின்னமாகத் தேர்த்தெடுத்து வைத்துக் கொண்டது. அதே போன்ற ஆன்மிக சிந்தனையில் வந்தவரான ரஜினி, இப்போது தனது புதிய கட்சி அறிவிப்பில் சின்னமாக தாமரை மலர்ப் பீடத்தில் பாபா முத்திரைக் கை இருப்பது போல் அமைத்திருந்தார்.
ரஜினி கடந்த 31ஆம் தேதி தனிக் கட்சி அறிவிப்பு வெளியிட்ட போதும், அவர் நின்ற மேடையின் பின்புறம் பாபா முத்திரை லோகோவுடன் தாமரை மலரும் இருந்தது. தாமரை மீது பாபா முத்திரை நிற்பது போன்ற சின்னம் அமைந்திருந்தது.
இந்நிலையில், இதுவே அவரது கட்சியின் சின்னமாக அமையப் பெற்றால், அதில், பாஜக.,வின் அரசியல் சின்னமான தாமரையும் இடம்பெற்றுவிடக் கூடும் என்றும், அது பாஜக., சார்பு அரசியலை வெளிப்படுத்திவிடும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அதனை பலரும் ரஜினிக்கு எடுத்துச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனை உன்னிப்பாகக் கேட்ட ரஜினி, அந்த சின்னத்தில் இருந்து தாமரையை மட்டும் நீக்க அனுமதி கொடுத்தாராம். இதை அடுத்து, பாபா முத்திரை மட்டும் அமைக்கலாம் என்று முடிவு ஆனதாம்.
இதன் பின்னர் நேற்று ரஜினி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ரசிகர்களுக்காக ஒரு இணையதளம் தொடங்கியுள்ளதாகவும், அதில் அனைவரும் சேர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு லோகோ முன்னும் பின்னும் அந்த வீடியோவில் காட்டப்பட்டது. அதில், தாமரைச் சின்னம் காணாமல் போனது. வெறும் பாபா முத்திரை மட்டுமே இடம் பெற்றது.
மேலும், பாபா முத்திரை வட்டத்தில் முன்பு கருப்பு வண்ணம் இருந்தது. அது இப்போது நீல நிறமாக மாறியது. தாமரை மலர் நீக்கப்பட்ட பாபா முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற குறிக்கோள் வாசகம் இடம் பிடித்துள்ளது. ஆக, பாஜக., சார்பில் இருந்து விலகி நிற்கவே, தாமரையைத் தவிர்த்துள்ளார் ரஜினி என்று கூறப்பட்டுள்ளது.