
ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி சிறையில் இருக்கும் சசிகலா, மௌன விரதம் இருந்துவருகிறார். ஆனால் மௌன விரதம் இருப்பதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இதற்கிடையே இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், சசிகலா மௌன விரதம் இருந்துவருவதால், அவர் நேரில் ஆஜராகமாட்டார் எனவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனே நேரில் ஆஜராவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து தப்பிக்கவே சசிகலா மௌன விரதம் இருந்துவருவதாகவும் பேசப்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்ததுவரையிலான 75 நாட்களும் ஜெயலலிதாவுடன் இருந்தது சசிகலா மட்டும்தான் என்ற வகையில் அவரிடம் நேரில் விசாரிக்க விசாரணை ஆணையம் முடிவு செய்தது. அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டபோது, அந்த வீடியோவை சசிகலாவிடம் இருந்து பெற்றதாக கூறினார்.
எனவே ஜெயலலிதாவுடன் மருத்துவமனையில் இருந்தவர் என்பதன் அடிப்படையிலும் வீடியோ எடுத்தது தொடர்பாகவும் சசிகலாவிடம் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் முனைந்த நிலையில், விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து தப்பவே சசிகலா, மௌன விரதம் ஸ்டண்ட் அடித்துள்ளதாக பேசப்படுகிறது.