
தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து நாடு முழுதும் நடந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலில் சில முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. அதற்கான சட்ட முன்வரைவு தயார் செய்யப்பட்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டமசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா, சமூக நீதிக்கு எதிராக உள்ளதாகவும் அதில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நீக்குமாறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நாடு முழுதும் போராட்டம் நடத்தினர்.
சமூக நீதிக்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளன. புதிய சட்டப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் விருப்பப்படி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள முடியும்.
மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொள்ள இந்தச் சட்டம் வகை செய்கிறது. இப்போதுள்ள மருத்துவக் குழுவுக்கு எல்லா மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், புதிய சட்டப்படி ஏற்படுத்தப்படும் மருத்துவ ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 20 பேர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவர் அல்லாதவர்கள் ஆவர். மீதமுள்ள 5 பேர் மட்டுமே மருத்துவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும், ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்களும் 6 மாத பயிற்சி பெற்ற பிறகு அல்லோபதி மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்படுவர். இது, போலி மருத்துவர்களை அரசே ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் எம்பிபிஎஸ் படித்து, பயிற்சி பெற்றவர்கள் மருத்துவர்களாக பணிக்கு செல்வதற்கு முன் தேர்வு எழுத வேண்டும் என்று உள்ளது.
எனவே மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இவையெல்லாம் சமூக நீதிக்கு எதிராக இருப்பதாகவும் இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் தனியார் மருத்துவர்கள் நாடு முழுதும் போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நாடு முழுதும் மருத்துவர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு அனுப்பியது. இதையடுத்து நாடு முழுதும் நடத்தப்பட்ட மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.