மாநிலங்களவை எம்.பி. தேர்தல்.. திமுகவிடம் ஓரிடத்தை கேட்க தயாரான காங்கிரஸ்.. ப. சிதம்பரம் எம்.பி. ஆவாரா?

By Asianet TamilFirst Published May 11, 2022, 9:50 PM IST
Highlights

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்தை எதிர்பார்க்கிறது. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டதால், வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்.பி. பதவிகளைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. 

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் ஓரிடத்தை திமுகவிடம் காங்கிரஸ் கேட்கும் என்று அக்கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.   

திமுக கூட்டணிக்கு 4 எம்.பி. பதவி

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றம் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நவனீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கான தேர்தல், இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தில்தான் கட்சிகள் இந்தப் பதவியைப் பிடிக்க முடியும். ஒரு எம்.பி. பதவியைப் பெற வேண்டுமென்றால், 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் 4 எம்.பி. பதவிகளை இக்கூட்டணியால் வெல்ல முடியும். 

ப. சிதம்பரம் பதவி காலம் முடிவு

அதிமுக - பாஜகவுக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, இக்கூட்டணியால் 2 எம்.பி. பதவிகளை வெல்ல முடியும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்தை எதிர்பார்க்கிறது. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டதால், வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்.பி. பதவிகளைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் எம்.பி. பதவிக் காலம் முடிவடைவதாலும், அவர் திமுக ஆதரவுடன் எம்.பி. பதவியைப் பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். எனவே, கூட்டணி தர்மம் கருதி காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை திமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி முடிவு

இந்நிலையில் திமுகவிடம் மாநிலங்களை பதவியைக் கேட்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கே.எஸ். அழகிரி, “ தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 
 

click me!