
திமுகவுக்கு சாபமிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு தேர்தலிலாவது வெற்றி பெற்று காட்டட்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சவால் விடுத்துள்ளார். பாஜகவினர் வாய்ச்சொல் வீரர்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, கட்சிக்கு வருகிற 10ஆம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்றார். கட்சிக்கு 15 லட்சத்திற்கு மேல் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார். ராமபிரான் காந்தியிடம் இருந்தவரை நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாப்பாக இருந்தது என்றும், அது அத்வானியின் கைக்கு சென்றபோது நாட்டில் ரத்தக்களறி ஏற்பட்டது என்றும் அவர் கூறினார். அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாநிலத்தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் எந்த பக்கம் நிற்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் பக்கமும் நிற்காது, வலதுசாரிகள் பக்கமும் நிற்காது அது தனக்கான இயல்பான கொள்கையை கொண்டே பயணிக்கிறது என்றார்.
விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மலரும் என்ற அவர், கடந்த ஓராண்டாக திமுக சிறப்பாக ஆட்சி செய்துள்ளது என்றும், அதை பாராட்டுவதாகவும் கூறினார். வாரிசு அரசியலில் ஈடுபடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காணாமல் போய்விடும் என அண்ணாமலை சாபம் விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தலைவர்கள் வாய்ச்சொல் வீரர்கள், திமுக அவருக்கு சாபம் விடும் அண்ணாமலை ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும் என தெரிவித்துள்ளார்.