
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்ட்ப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.
கேதா மாவட்டத்திலுள்ள காம்லா கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்தியில் நரேந்திர மோடி பிரதமரானதும், தொடங்கிடு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்ததாக குறிப்பிட்டார்..
உயர்பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகளை அமல்படுத்தினார். இந்த முடிவு, சிறிய வணிகர்கள், விவசாயிகளுக்கு அழிவை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் , ஒரேயொரு நிறுவனம் மட்டும் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் அடையாளமே இல்லாமல் இருந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிறுவனமாகியுள்ளது. அதாவது, ரூ.50 ஆயிரம் என்ற மதிப்பு, ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது என ராகுல் குறிப்பிட்டார்.
ஊழலில் ஈடுபட மாட்டேன், பிறரை ஊழலில் ஈடுபடவும் அனுமதிக்க மாட்டேன் என்று மோடி தெரிவித்தார். இந்நிலையில், அமித் ஷா மகன் ஜெய்க்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டும் எப்படி அதிகரித்திருக்கும் என கேள்வி எழுப்பினார்.
ஆனால், இப்பிரச்சனையில் , மோடியோ அமைதியாகிவிட்டார். இதேபோல், பிரதமராக செயல்படப் போவதில்லை, நாட்டின் சொத்துக்கு காவலாளியாக இருக்கப் போகிறேன் என்று மோடி தெரிவித்திருந்தார். அந்த காவலாளி தற்போது எங்கு சென்று விட்டார்? என ராகுல் கேள்வி எழுப்பினார்.
மிஸ்டர் மோடி , நீங்கள் பாதுகாவலராக நீங்கள் செயல்படுகிறீர்களா அல்லது நீங்களும் இதில் கூட்டாளியா? தயவு செய்து ஏதாவது பதிலளியுங்கள், அமைதியாக இருக்காதீர்கள் என ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.