
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான செலவை டெங்கு பாதித்தோருக்கு செய்திருக்கலாம் எனவும், டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு சென்றும் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்து வருகின்றனர்.
இன்று மட்டும் ஊத்தங்கரையில் டெங்குவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் டெங்குவை ஒழிக்க தமிழகம் முழுவதும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்குவை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை எனவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான செலவை டெங்கு பாதித்தோருக்கு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் 12,000க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி ஈரமுள்ள இதயத்தை ஈட்டியால் குத்துவதுபோல் உள்ளதாகவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு தேமுதிக நிர்வாகிகள் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார்.