ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தவறாக அதிகாரிகள் அழைப்பிதழ் அனுப்பி இருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கானது நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் பாஜகவோ அதிமுக இரண்டு பிளவாக உள்ளது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகிறது. எனவே இரண்டு தரப்பும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால் இபிஎஸ் தரப்போ அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பையும் ஒன்றாக பார்க்கும் பாஜக தற்போது எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும் வகையில் ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்தார். அதே நேரத்தில் கட்சி சார்பாக அழைக்கப்பட்டு இருந்தால் தவறு என்று எடுத்துக் கொண்டிருக்கலாம் ஆனால் இதில் ஏதேனும் டெக்னிக்கல் பிரச்சனையாக இருக்கும் என நினைப்பதாக கூறினார். இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் என உள்ளதாகும் குறிப்பிட்டார்.
இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், எனவே அவர்கள் திருத்தம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக இரண்டு அணியாக இருப்பது டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்றும் எனவே யாரோ கூறியதை வைத்து அழைப்பிதழ் அனுப்பி இருக்கலாம் என தெரிவித்தார். ஜி 20 மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இதில் ஏதேனும் ஒரு நாளில் ஓபிஎஸ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக..! அண்ணாமலையை கலாய்க்கும் சுப்பிரமணியன் சாமி