
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக இம்மாவட்டம் முழுவதும் மழை நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கனவே மத்திய குழு பயிர் சேதங்களை இம்மாவட்டத்தில் பார்வையிட்டு சென்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மத்திய பார்வையாளர்கள் குழு இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் பார்வையிட்டது, புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் மேலூர் ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகளை நேரில் சந்தித்து பயிர் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வில் மீன்வள மேம்பாட்டு துறை ஆணையர் பால் பாண்டியன் தலைமையில் வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் அமைச்சகத்தின் மண்டல மேலாளர் ரஞ்சன் ஷேக் சிங் மத்திய மின்சார ஆணையத்தின் உதவி இயக்குனர் ஷீபம் கார்க் ஆகியோர் கொண்ட குழுவுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் வேளாண்மை துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக விவசாயிகளிடம் நேரில் பேசிய அதிகாரிகள் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனால் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என கேட்டறிந்தனர்.
அதற்கு விவசாயிகள் ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக நெல், துவரை, கடலை உள்ளிட்ட அனைத்து விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டதாகவும் அடுத்தது என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவும் ஆகவே அரசாங்கம் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதற்கு மத்திய குழுவினர் நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு மத்திய மாநில அரசுகள் என்றென்றும் துணை இருக்கும் என ஆறுதல் கூறினர்.