கோடிகளில் திட்டம் போட்டு ஆயிரம் ரூபாய் ஒதுக்கிய மோடி அரசு.. மண்டைய பிய்த்துக் கொள்ளும் மதுரை எம்பி.

By Ezhilarasan BabuFirst Published Feb 4, 2021, 4:12 PM IST
Highlights

சென்ற ஆண்டு இதேபோல புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. நான் அதனை வன்மையாக கண்டித்தேன். அது தொடர்பாக
ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன்.  

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும், ரயில் பாதை விரிவாக்க திட்டத்திற்கு11 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ஒதுக்கப்பட்டுள்ளதோ வெறும் 95 கோடி மட்டு என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் 11 புதிய லைன்திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது வெறும் 95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் 208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடியும், மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான புதியபாதை திட்டத்தின் 1800 கோடிக்கு வெறும் 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மற்ற திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு -புத்தூர்; ஈரோடு -பழனி ;சென்னை- மகாபலிபுரம்- கடலூர்; கூடுவாஞ்சேரி- திருப்பெரும்புதூர்; மொரப்பூர்- தர்மபுரி; காரைக்கால் -பேரளம்; சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகிற பத்தாயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதேபோல புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. நான் அதனை வன்மையாக கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன். ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. 

சென்ற ஆண்டு நான் இதை விமர்சித்த போது ரயில்வே நிர்வாகம் தாங்கள் காட்பாடி- விழுப்புரம் ;கரூர் -சேலம்- திண்டுக்கல் ;கரூர்- ஈரோடு ; சென்னை கடற்கரை-எழும்பூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் மின் மையத்துடன் கூடியதாக இந்த பட்ஜெட்டில் இணைத்துள்ளோம். என்று கூறியிருந்தார்கள் ஆனால் அந்த நாலு திட்டத்துக்கும் கூட தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கி இருப்பதை அப்போது சுட்டிக் காட்டினேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் இந்த நான்கு திட்டங்களில் காட்பாடி விழுப்புரம் திட்டத்துக்கு 1600 கோடி தேவை. ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். கரூர் சேலம் திண்டுக்கல் திட்டத்துக்கு 1,600 கோடி தேவை .ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய் .கரூர் ஈரோடு திட்டத்துக்கு தேவை 650 கோடி. ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். பீச் திட்டத்துக்கு 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 779 கோடி ரூபாய்க்கு 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் திட்டங்கள் நடைமுறையில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களாக மாறியுள்ளன. 

தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி மின் மயத்துடன்  கூடிய இரட்டைப் பாதை திட்டம். அதைப்போல வாஞ்சி மணியாச்சி யிலிருந்து நாகர்கோயில்; அதைப்போல திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு என்று மூன்று திட்டங்களுக்கும் மீதி 3000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறும் 775 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்  2017ல் அறிவித்தபோது 2022ல் முடியும் என்று  மத்திய அமைச்சரவை கூறியது. ஆனால் இப்போதைய நிலைமையில் 2025ல் கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலை உள்ளது. மத்திய பட்ஜெட் தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!