கலெக்டரை அதிமுக மகளிர் அணி தலைவியாக்கிய திமுக எம்எல்ஏ... 4 பிரிவுகளில் வழக்கு..!

By vinoth kumarFirst Published Nov 20, 2019, 12:39 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது என தெரிவித்தார். ஆட்சியரை விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிமுக மகளிரணி மாவட்டச் செயலாளர் போலச் செயல்படுகிறார் என விமர்சித்த திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

புதுக்கோட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திருமயம் தொகுதி எம்.எல்.ஏ ரகுபதி என்னுடைய தொகுதியில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் எனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 

இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ. ரகுபதி "கூட்டுறவு சங்கத்தின் வாரவிழாவிலும் எம்.எல்.ஏ என்ற முறையில் பத்திரிகையில் பெயர் போடவில்லை. அழைப்பும் விடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்தான் முறையிட முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியரோ அதிமுக மகளிரணி மாவட்டச் செயலாளர் போலச் செயல்படுகிறார் என்றார். ஆட்சியரே அப்படி இருக்க நான் யாரிடம் முறையிட முடியும் என கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது என தெரிவித்தார். ஆட்சியரை விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் சேக் திவான் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, ரகுபதி மீது, 4 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

click me!