நீங்க அப்படி சொன்னால், நாங்க இப்படி சொல்லுவோம்... புதுச்சேரி பதவியேற்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 27, 2021, 7:38 PM IST
Highlights

கொரோனா 2வது அலை  காரணமாக புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா ஆளுநர் மாளிகை முன்பு மேடை அமைத்து இன்று மதியம் நடந்தது. 

புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கடந்த மே7ம் தேதி பதவியேற்றார். பாஜகவுடனான அமைச்சர்கள் குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாதை அடுத்து 50 நாட்களாகியும் அமைச்சரவை அமையாமல் இருந்தது.  இறுதியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு என்ஆர்.காங்கிரசில் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பரிந்துரைக்கப்பட்டனர். அமைச்சர்கள் பட்டியலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்து அரசிதழில் வெளியிடப்பட்டது.

கொரோனா 2வது அலை  காரணமாக புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா ஆளுநர் மாளிகை முன்பு மேடை அமைத்து இன்று மதியம் நடந்தது. முதலில் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் பதவியேற்றார். தொடர்ந்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவை சேர்ந்த சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அனைவருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை தமிழ்மொழியில் செய்து வைத்தார்.

கடவுள் பெயரால் உறுதி மொழி ஏற்றனர். அப்போது, "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்" என்று ஆளுநர் தெரிவிக்க, அதை பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் என்று கூறி பதவியேற்றனர். தமிழகத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பெரும் சார்ச்சையை கிளப்பி வரும் நிலையில், புதுச்சேரி ஆளுநர்  " இந்திய ஒன்றியம்" என்று கூற அதை பதவியேற்ற அமைச்சர்களும் திருப்பி கூறி பதவியேற்றது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக விழாவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில்,  திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!