
ஆந்திர முதல்வரே எந்த நேரமும் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கவும், அரசின் திட்டங்களை உள்ள குறைகள், நிறைகளை தெரிவிக்கவும் ‘முதல்வரோடு இணைந்திருங்கள்’(சி.எம். கனெக்ட்) என்ற மொபைல் ஆப்ஸை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிமுகம் செய்தார்.
இந்த மொபைல் ஆப்ஸ் மைக்ரோசாப்ட் கைசாலா மூலம் இயங்குகிறது.
இந்த செயலியை அறிமுகம் செய்தபின் தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது-
நான் அறிமுகம் செய்த இந்த ஆப்ஸ் உலகிலேயே தனித்தன்மை வாய்ந்தது. மாநிலம் முழுவதையும் மின்னணு நிர்வாகத்துக்கு நகரத்தி இருப்பதில் இது ஒரு மைல்கல்லாகும். மாநிலத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மக்களின் பங்களிப்பு இருக்கும்.
ஏற்கனவே இந்த செயலியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து அது தோல்வியில் முடிந்த நிலையில், இதே திருத்தி மேம்படுத்தி இருக்கிறோம்.
இந்த செயலியில், மக்கள் தங்களுக்கு எழும் எந்த கேள்விகளையும் முதல்வருக்கு நேரடியாக தெரிவிக்கலாம். குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்துக்களை கூறலாம்.
மாநில அரசின் செயல்பாடு மனநிறைவாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு 3 ஆயிரம் பேர் பதில் அளித்துள்ளனர். 75 சதவீதம் பேர் நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். என் தலைமையிலான குழு தொடர்ந்து இந்த செயலியின் செயல்பாட்டையும், மக்களுக்கு பதில் அளிப்பதையும், நடவடிக்கையை வேகப்படுத்துவதையும் கண்காணிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செயலியை அறிமுகம் செய்தவுடனே ஏராளமான மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். சிலர் அரசை பாராட்டியும், சிலர் எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, அதிகாரிகள் சரியாக பணி செய்யவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். அதே சமயம் சிலர் அரசின் செயல்பாடுகளை பாராட்டியும் செய்திகள் அனுப்பினர்.