
மாரடைப்பால் உயிரிழந்த மகாதேவன், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அன்புக்கு உரியவராக ஒருகாலத்தில் இருந்தவர்.
ஆனால், காலப்போக்கில் அவரது அதிரடி செயல்பாடுகளை கண்டு கோபமடைந்த ஜெயலலிதா, இனி கார்டன் பக்கமே தலை காட்டக்கூடாது என்று விரட்டிவிட்டார்.
ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராக சில காலம் மட்டுமே இருந்த மகாதேவனை நீக்கி, அந்தப் பதவியில் தளவாய் சுந்தரத்தை நியமித்தார் ஜெயலலிதா.
அதிமுகவில் நீண்ட நாட்களாக ஓரங்கட்டப்பட்டு வந்த மகாதேவன், கடந்த 2006ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதாவின் முன்னிலையில் இணைந்தார்.
இதனால் டி.டி.வி.தினகரனுக்கும், மகாதேவனுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இருதரப்பு ஆதரவாளர்களும் மோதி கொண்டனர்.
ஆனால் ஜெயலலிதா, மகாதேவனை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆதரித்து வந்தார். இதனால் டி.டி.வி.தினகரன் கடும் அதிருப்தி அடைந்தார்.
ஆனால், திடீரென ஜெயலலிதா, அதிமுகவில் இருந்து மீண்டும் மகாதேவனை ஒதுக்கி வைக்க தொடங்கினார். கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதா, காவிரி நதி நீர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அந்த உண்ணாவிரதத்தில் மகாதேவன் கலந்து கொள்ள கூடாது என ஜெயலலிதா உத்தரவே பிறப்பித்திருந்தார்.
அன்று முதல் ஜெயலலிதா இறக்கும் வரை மகாதேவன், கார்டன் பக்கம் வராமலே இருந்தார்.
அதிமுக துணை பொது செயலாளராக தினகரன் பொறுப்பேற்ற பிறகும், மகாதேவன் எக்காரணம் கொண்டும் கார்டன் பக்கம் வந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.