
திரை மறைவில் இருந்து பலரை ஆட்டி படைப்பவர்கள், வெளிச்சத்திற்கு வரும்போது, சோபிக்க முடியாமல் போய்விடுகிறது என்பதற்கு சசிகலாவே மிகச்சிறந்த உதாரணம்.
ஜெயலலிதாவோடு 33 வருடங்கள் இருந்த சசிகலா, கட்சி மற்றும் ஆட்சியின் தவிர்க்க முடியாத மிகப்பெரிய அதிகார மையமாகவே திகழ்ந்தார்.
ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தின் பின்னணியிலும் சசிகலாவே இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கட்சியில் யார், யாருக்கு என்ன பொறுப்பு, யாரை நியமிப்பது, யாரை நீக்குவது என்பது உள்ளிட்ட, ஜெயலலிதாவின் அனைத்து முடிவுகளுக்களின் பின்னணியிலும் சசிகலாவே இருந்தார்.
ஜெயலலிதா இருந்த வரை வலுவாக இயங்கிய சசிகலாவின் ஜாதகம், அவர் இறந்த பின்னர் செயலிழந்து விட்டது.
பொது செயலாளர் பதவியை கைப்பற்றியதோடு நின்றிருந்தால் கூட, சசிகலாவுக்கு இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது.
என்றைக்கு முதல்வர் நாற்காலியை நெருங்க ஆரம்பித்தாரோ, அன்று முதல் அவரது அரசியல் எதிர்காலத்தின் கடைசி அத்தியாயம் தொடங்கி விட்டது.
முதல் எதிர்ப்பு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் இருந்துதான் ஆரம்பித்தது. சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது, அம்மா பிடித்து வைத்தால் சாணியும் பிள்ளையார், வீசி எறிந்தால் பிள்ளையாரும் சாணிதான் என்ற அவரது வர்ணனை, சசிகலாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.
ஜெயலலிதாவிடம் மீண்டும் சேர்ந்த உடனேயே, முனுசாமிக்கு எதிரான வேலையை தொடங்கி விட்டார் அவர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுகவை பின்னுக்கு தள்ளி, வெற்றி பெற்றார் அன்புமணி ராமதாஸ்.
அதை காரணமாக் கூறி, அந்த மாவட்ட அமைச்சர் பழனியப்பனை பதவிநீக்கம் செய்வதுதான் முறை. ஆனால் சாதியை காரணம் காட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கே.பி. முனுசாமியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க காரணமாக இருந்தவர் சசிகலா.
இதில் இருந்தே, கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவின் செல்வாக்கை உணர முடியும். அதனால்தான், சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீருக்கு ஆதரவாகவும் முதலில், முனுசாமியின் குரல் ஒலித்ததது.
அடுத்து, கருப்பசாமி பாண்டியன், பி.எச்.பாண்டியன் என சசிகலாவால் பாதிக்கப்பட்ட அனைவருமே எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர், தீபாவிடம் போய், தற்போது ஓ.பி.எஸ் அணிக்கு வந்து விட்டனர்.
ஆனாலும், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சசிகலாவை தீவிரமாக எதிர்த்த பலரையும், சமரசம் செய்து மீண்டும் தமக்கு ஆதரவாக கட்சியில் சேர்த்தார் சசிகலா.
எனினும், கூவத்தூர் கலாட்டா முடிந்த பின்னரும், சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால், எடப்பாடியை முதல்வராக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது சசிகலாவுக்கு.
பன்னீர்செல்வத்தின் தியானம், பொது செயலாளர் தேர்வு செல்லாது என்ற தேர்தல் ஆணைய பஞ்சாயத்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் கொடுத்து வரும் குடைச்சல், ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தம், குடும்ப உறவுகளுக்கு மத்தியில் நடக்கும் அதிகார மல்யுத்தம் என பலவிதமான மன குமைச்சலுடன்தான் பெங்களூரு சிறையில் இருக்கிறார் சசிகலா.
இந்த நேரத்தில், பாசத்திற்குரிய அண்ணன், விநோதகனின் மூத்த மகன் மகாதேவன் மரணம் அடைந்தது, அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயலலிதா இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் பவர்புல்லாக இயங்கிய சசிகலாவின் ஜாதகம், அவர் மறைவுக்கு பின்னர், செயலிழந்து விட்டதால், அடிமேல் அடி வாங்கி வருகிறது சசிகலா குடும்பம்.