
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் விநோதகனின் மகன் டி.வி.மகாதேவன். இவர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்வதற்காக கும்பகோணம் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து மகாதேவனின் இறுதி ஊர்வலம் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் தஞ்சாவூருக்குச் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், மாகதேவனின் இறுதி ஊர்வலத்தில் சசிகலா கலந்துகொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.
மகாதேவனின் இறப்பு குறித்து சசிகலாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சிறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தியிடம் தகவலைத் தெரிவித்தபோது, சசிகலா கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
பின்னர் தனது அண்ணன் மகன் டி.வி.மகாதேவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது குறித்து சசிகலா கோரிக்கை விடுத்தார்.
அதற்கு சிறைக் காவலில் இருக்கும் குற்றவாளியின் உறவினர் உயிரிழக்கும் பட்சத்தில், இறந்தவர் குற்றவாளியின் முதல் இரத்த சொந்தமாக இருந்தால் மட்டுமே, அவருக்கு பாரோலில் நிபந்தனையின் படி வெளியே வர அனுமதி வழங்கப்படும் என கூறி சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் சிறை அதிகாரி.
மேலும் சசிகலா மகாதேவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி, அனுமதி பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.