மன்னார்குடி ஜீயரின் ஆணவ பேச்சுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பட்டம்.. கீ. வீரமணி அறிவிப்பு..

Published : May 06, 2022, 05:02 PM ISTUpdated : May 06, 2022, 05:03 PM IST
மன்னார்குடி ஜீயரின் ஆணவ பேச்சுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பட்டம்.. கீ. வீரமணி அறிவிப்பு..

சுருக்கம்

மன்னார்குடி ஜீயரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மே 8ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெரியார் பல்கலைக் கழகத்தில் காவிக் கரையான்கள் கல்வியை செல்லரித்துக் கொண்டுள்ள நிலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி சேலம் கருப்பூர் அருகில் நடைபெறவிருக்கிறது. மே 9 இல் நெய்வேலியில் வஞ்சிக்கப்படும் தமிழ் இளைஞர்களுக்கான உரிமைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.  மே 8 ஆம் தேதியன்று மன்னார்குடி ஜீயரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. 

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக   ‘திராவிட மாடல் ஆட்சி’ - ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகரின்’ தலைமையில் சீரோடும், சிறப்போடும் ஓராண்டாக நடைபெற்று வருகிறது. நேரிய வழியில் ஆட்சியைப் பிடிக்க இயலாத காவிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் சில இடையூறுகளை - அவர்களது ‘சுற்றுக்கிரகங்கள்’மூலம் செய்து பார்க்கலாம் என்று திட்டம் போட்டு, எந்த சிறு துரும்பு கிட்டினாலும் அதையே பெரிய தெப்பமாகப் பிடித்துத் தொங்கும் பரிதாபத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள்.

இதற்குத் தகுந்த பதிலடியை மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 4.5.2022 அன்று தெளிவாகவும், துணிவாகவும், உறுதியாகவும் தெரிவித்துவிட்டார். ‘‘திராவிடர் கழகமான தாய்க் கழகத்தவரே, உங்கள் உழைப்பும், உறுதியும் வீண் போகாது; தகுந்த பலனளிக்கும்‘’ என்று 25.4.2022 அன்று பெரியார் திடலில் நடைபயணத்திற்கு ‘ஒத்தடம்‘ தருவதுபோல ஊக்க ஊசியைப் போட்டது உண்மை விளம்பல் என்பது, இதுவரை குத்திட்டு அமர்த்தப்பட்டிருந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாம் தடவை நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்குபற்றிய மசோதா, குடியரசுத் தலைவருக்கு சுமார் 250 நாட்களுக்குப்பின் நேற்று முன்தினம் (4.5.2022) அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. 

ஆளுநரின் அதிகாரம் எவ்வளவு என்பதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓங்கி அடித்து வெளிச்சம் போட்டுக் ‘கடிதோச்சி மெல் எறிதலாக’ தெரிவித்திருப்பது, நாம் அரசமைப்புச் சட்ட ரீதியாக தந்த விளக்கம் எப்படி சட்டப்படியும், நியாயப்படியும் சரியானது - முறையானது என்பதை இனி அகிலம் புரிந்துகொள்ளும் என்பது நிச்சயம்.

எம் இளைஞர் பட்டாளம் அணிவகுத்து பணிமுடிக்க தயார் நிலையில் உள்ளது. திராவிடர் கழகத்தின் ‘சாப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்’ படையினரான நமது பணி நாளும் முன்னோட்ட கடமையானபடியால், பலமடங்கு கூடுதல் பொறுப்பாகிறது. எந்த விலையும் கொடுத்து, எத்தகைய இன்னலையும் இலட்சியத்திற்காக இன்முகத்தோடு ஏற்க இமை கொட்டாது தொண்டாற்ற எம் இளைஞர் பட்டாளம் அணிவகுத்து பணிமுடிக்க தயார் நிலையில் உள்ளது.அதனால் தான் வருகிற 9 ஆம் தேதி நெய்வேலியில் உத்தியோகங்களை வடவருக்குத் தாரை வார்க்கும் தருக்கக் குணத்தை எதிர்த்து அறப்போர்.  காலியாக உள்ள 300 பொறியாளர் பணிகளில் ஒருவர்தான் தமிழினத்தவராம்! என்ன கொடுமை இது!

சேலத்தில் பெரியாரை அனுமதிக்காத பெரியார் பல்கலைக் கழகத்தில் காவிக் கரையான்கள் கல்வியை செல்லரித்துக் கொண்டுள்ள நிலைக்குக் கண்டன அறவழிப் போராட்டம் - குமுறும் மக்களின் கொந்தளிப்பு வன்முறைக்குப் போய்விடாமல் - வழிமுறையோடு நடைபெற - எதிர்ப்பு உணர்ச்சிகள் முறையான வடிகாலாய் அமையும் வகையில், அந்தக் கரையான்களைக் கட்டுப்படுத்தி, காவி கட்டுவிரியன்களின் விஷப் பல்லைப் பிடுங்க முன்னோட்ட அறப்போராட்டம் வருகிற 11 ஆம் தேதி சேலம் கருப்பூர் அருகில் நடைபெறவிருக்கிறது.

மன்னார்குடியில் உள்ள செண்டலங்கார ஜீயர் என்பவர், தலைக்கொழுப்புடன் அமைச்சர்கள் நடமாட முடியாது என்றெல்லாம் வரம்பு மீறி பேசி, வன்முறை வெறிக்கு, மதக்கலவரத்தைத் தூண்டியும், காவிக் காலித்தனத்திற்குக் கால்கோள் விழா நடத்திட முயல்வதைக் கண்டித்து, மே 8 அன்று  கழகத்தவர்களும், ஒத்தக் கருத்துடைய அனைத்து முற்போக்காளரும் பங்கேற்கும் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- அவரை கைது செய்ய வலியுறுத்தும் அறப்போர் கழகத்தின்மீது அவரது ஆணவப் பேச்சால் திணிக்கப்படுகிறது.
எனவே, அதற்கும் ஆயிரக்கணக்கில் உணர்ச்சியுள்ளவர்கள் திரளவேண்டும். அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டைக் காப்பாற்ற முன்னெடுக்கும் கடமை நமக்கு உண்டே!குமுறும் மாணவர்கள், கொந்தளிக்கும் மக்கள் கூடிக் கண்டனம் தெரிவிக்கும் அறப்போராட்டங்கள் கழகப் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி