
இப்போது பேசப்படுவது திராவிட மாடல் என்று சொல்லப்படுவதை காட்டிலும் திமுக மாடல் என்று சொல்லலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திராவிடம் என்பது இந்திய தேசத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்ற விமர்சனத்தை தொடர்ந்து பாஜக முன்வைத்து வருகிறது. அதே நேரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக முன்னணி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். சமீபத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க துபாய் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மீதே அவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக அவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து குறிவைத்து விமர்சித்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க திமுக ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன ஓராண்டு காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் ஆட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூறியுள்ளனர். அந்த வரிசையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்துள்ளார். அதில் மூத்த அமைச்சர்கள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர் என்றும், குறிப்பாக அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என்றும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு எந்த கேள்வி கேட்டாலும் பொறுப்பாக பதில் அளிக்கிறார் என்றும் வானதி சீனிவாசன் பாராட்டியுள்ளார். மேலும் தனது தலைமையிலான அரசு திராவிட மாடல் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வானதி சீனிவாசன், திராவிடம் என்பது தென்னிந்தியாவை குறிக்கிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
நாங்களும் திராவிடம் என்பதை ஒரு நிலப்பரப்பின் அடிப்படையில் பார்க்கிறோம், மொத்தத்தில் திராவிடம் என்பது இந்திய திருநாட்டில் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பலரின் பங்கு இருக்கிறது. அதை நான் சட்டமன்றத்தில் குறிப்பிட்ட பேசியபோது இல்லை அதற்கு முன்னதாகவே நீதிக்கட்சி காலத்திலேயே நாங்கள் தொடங்கி விட்டோம் எனக் கூறினார்கள், அப்படி எனில் அந்தப் பெருமையை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் அதற்கு முன்பாகவே தமிழக மண்ணுக்கென்று பெருமை இருக்கிறது, சுயமரியாதை இருக்கிறது. குலோத்துங்க சோழனை கேள்வி கேட்டபோது கம்பருக்கு சுயமரியாதை இருந்தது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜன் சமூகநீதியை இந்த மண்ணில் பேசியிருக்கிறார்.
எனவே சுயமரியாதை என்பது சமூக நீதி என்பது நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் வந்ததல்ல, திராவிட மாடல் என்று சொன்னால் அதில் காங்கிரஸ் பங்கு உண்டு, அதிமுகவுக்கும் பங்கு உண்டு, எனவே இவர்கள் திராவிட மாடல் என்று சொல்வதைவிட திமுக மாடல் என்று சொல்லலாம் என வானதி கூறியுள்ளார்.