
அதிமுக செய்தித் தொடர்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் தீரன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் போராசிரியர் தீரன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தவர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இபிஎஸ் –ஓபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுகவில் கட்சிக்கு எதிராக செயல்பட்டுவருபவர்களை களை எடுத்து வருகின்றனர்.
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக செய்திர் தொடர்பாளர் பட்டியலை அக்கட்சி அண்மையில் வெளியிட்டது. இதில் ஆவடி குமாரின் பெய்ா இடம் பெறாததால் அவர் போர்க்கொடி உயர்த்தினார். தனது பெயர் இடம் பெறாவிட்டாலும் தொடர்ந்து அதிமுகவுக்காக தொலைக்காட்சிகளில் பேசுவேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த செய்தித் தொடர்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் தீரன் இன்று மாலை திடீரென அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியர் தீரன், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான் பேராசிரியர் தீரன் தொலைக்காட்சி ஒன்றில் அதிமுக சார்பில் விவாதத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஆனாலும் அவர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக சார்பில் பேசினார்.