பிரசாந்த் கிஷோர் பிரஷ்ஷர்..! முறியும் நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி?

By Selva KathirFirst Published Mar 4, 2021, 11:12 AM IST
Highlights

திமுக 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பதில் பிரசாந்த் கிஷோர் உறுதியாக உள்ள நிலையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி முறியும் நிலையில் உள்ளது.

திமுக 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பதில் பிரசாந்த் கிஷோர் உறுதியாக உள்ள நிலையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி முறியும் நிலையில் உள்ளது.

கடந்த தேர்தல்களை போல் அல்லாமல் இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் திமுக மிகவும் கறார் காட்டி வருகிறது. இதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் போட்டுக் கொடுத்த கூட்டணி கணக்கு தான் என்கிறார்கள். தமிழகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கான செல்வாக்கு என்ன என்பதை பிரசாந்த் கிஷோர் விரல் நுனியில் வைத்துள்ளார். இடதுசாரிகள் முதல் மதிமுக, விசிக வரை எந்த கட்சியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாக்கு வங்கியை உயர்த்தவில்லை என்பது தான் பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு கொடுத்துள்ள ரிப்போர்ட்.

இதே போல் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட அளவில் வாக்கு வங்கி இருந்தாலும் அதனால் திமுகவிற்கு பெரிய அளவில் சாதகம் இல்லை என்பதும் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட்டின் சாராம்சம் என்கிறார்கள். பொதுமக்கள் யாருமே காங்கிரசுக்கு வாக்களிக்க தயாராக இல்லை என்பது தான் கடந்த சில மாதங்களாக மாறி மாறி எடுத்த சர்வேயின் முடிவாகவும் இருந்துள்ளது. திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர், திமுக கூட்டணியில் இருக்கிறது என்பதற்காகவே காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை என்பதை சர்வே மூலம் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் தான் காங்கிரசுக்கு 16 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு பரிந்துரைத்திருந்தார். ஆனால் இநத தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக முதலில் 18 வரை உயர்த்தியது. ஆனால் அதனை காங்கிரஸ் சுத்தமாக ரசிக்கவில்லை. இதன் பிறகே காங்கிரசுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை 20க்கும் சற்று அதிகமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதுவும் கூட காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு கூட காங்கிரஸ் தற்போது தயாராக இல்லை.

திமுகவும் கூட காங்கிரஸை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிலையில் இல்லை. இதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் கொடுக்கும் நெருக்கடி என்கிறார்கள். காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி திமுக தொகுதிகளை குறைத்துக் கொண்டால் அது அதிமுகவிற்கு நிச்சயம் சாதகமாக இருக்கும். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுமே அதிமுகவிற்கு ஈஸி டார்கெட். அந்த தொகுதிகளை எல்லாம் அதிமுக மிக எளிதாக வென்றெடுக்கும் என்று பிரசாந்த் கிஷோர் ஸ்டாலின் தரப்பை பயமுறுத்தி வருவதாக சொல்கிறார்கள்.

2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே தான் நடந்தது என்று பிரசாந்த் கிஷோர் ஆதாரத்துடன் கூறுவதால் காங்கிரஸ் விவகாரத்தில் மு.க.ஸ்டாலினும் கூட விரைந்து முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார். இதனிடையே கூட்டணி தொடர்பான பந்து தற்போது திமுக கையில் இருப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்துவிட்டது, இனி தாங்கள் பேச எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தெரிவிப்பத போலவே உள்ளது. மேலும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், விரைவில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து திமுகவுடன் கூட்டணியை தொடரலாமா? என கருத்து கேட்க உள்ளார்.இதன் பிறகு கூட்டணியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்கிறார்கள்.

click me!