எடப்பாடி ரூட் கிளியர்..! அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா..! தியாகராய நகர் வீட்டில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Mar 4, 2021, 10:58 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் பிரியக்கூடும் என்கிற அச்சத்திற்கு காரணமாக இருந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ரூட்டை கிளியராக்கியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் பிரியக்கூடும் என்கிற அச்சத்திற்கு காரணமாக இருந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ரூட்டை கிளியராக்கியுள்ளது.

சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேற்று மாலை திடீரென டிடிவி தினகரன் வருகை தந்தார். வழக்கமாக அவர் அங்கு ஒரு மணி நேரம் இருந்துவிட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் திடீரென ஜெயா பிளஸ் டிவியில், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிரேக்கிங் செய்தி ஒளிபரப்பானது. அதே நேரத்தில் டிடிவி தினகரனும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரும் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக முடிவெடுத்துள்ளதை உறுதிப்படுத்தினார். இதற்கு ஜெயலலிதாவின் பொற்கால அரசு தொடர சசிகலா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் சசிகலாவின் அறிக்கையில் எந்த இடத்திலும் அதிமுக என்றோ அமமுக என்றோ அரசியல் ரீதியாக எந்த குறிப்புகளும் இல்லை. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலோ, அல்லது அவரை விமர்சிக்கும் வகையிலோ கூட வாசகங்கள் இல்லை. ஆனால் சசிகலாவின் இந்த முடிவை மறைமுகமாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு உதவும் வகையில் உள்ளது.

சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் இணைத்து அமமுகவை கூட்டணியில் சேர்த்து தேர்தலை எதிர்கொள்ளவே பாஜக மேலிடம் விரும்பியது. ஆனால் சசிகலா விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் பிடிவாதமாக இருந்துவிட்டார். சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவை அனுமதித்தால் இதுநாள் வரை தான் செய்து வைத்திருந்த ஏற்பாடுகள் டம்மியாகிவிடும் என்கிற அவரது வாதம் பாஜக மேலிடத்தை யோசிக்க வைத்தது. மேலும் தேர்தல் நேரத்தில் சசிகலா போன்ற ஒருவரை முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்துவதும் ஆபத்து என்று பாஜக உணர்ந்தது.

இந்த நிலையில் தான் சசிகலாவுடன் நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையில் இப்படி ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரை பொறுமை காத்தால் அதன் பிறகு அதிமுகவில் எதிர்பார்த்த விஷயங்களை அடைய முடியும் என்று பாஜக தரப்பில் இருந்து சசிகலாவிடம் உறுதி அளிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். மேலும் தற்போது தமிழகம் முழுவதும் சசிகலா தொடர்புடைய சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணிக்கு இடையூறாக இருந்தால் சசிகலாவை எதிரியாகவே பார்க்க நேரிடும் என்கிற எச்சரிக்கை தான் அவரை பணிய வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தேர்தலை  பொறுத்தவரை அமைதியாக இருந்தால் போதும் என்பது தான் சசிகலாவிற்க பாஜக கொடுத்த பைனல் ஆஃபர் என்கிறார்கள். இதை ஏற்கவில்லை என்றால் பாஜகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் சசிகலா மிரட்டப்பட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு பாஜக கூறியது போல் நடந்து கொண்டிருந்தால் நான்கு வருடம் சிறையில் இருக்க  வேண்டியது இருந்திருக்காது, ஆனால் அப்போது பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்த காரணத்தினால் தான் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்ததை என்பதையும் சசிகலா யோசித்துள்ளார்.

எனவே தான் தற்போது ரிஸ்க் எதற்கு? தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சசிகலா இந்த விலகல் முடிவை எடுத்துள்ளார். மேலும் இது தற்காலிக நடவடிக்கை தான் என்றும் தேர்தலுக்கு பிறகு சசிகலா மறுபடியும் அரசியல் களம் காண்பார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன.

click me!