சசிகலாவின் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தி அடைய வைக்கும்.. அனுதாபம் காட்டும் கே.பி.முனுசாமி..!

Published : Mar 04, 2021, 10:38 AM IST
சசிகலாவின் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தி அடைய வைக்கும்.. அனுதாபம் காட்டும் கே.பி.முனுசாமி..!

சுருக்கம்

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா தனது முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி தினகரன்.

ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சிதான் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நான் என்றும் வணங்கும் என் அக்கா, புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சித் தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்;- ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா தனது முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சிதான். அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!