பொங்கல் பரிசு அறிவிப்பில் திருத்தம் தேவை.. இல்லையெனில் திட்டத்தை நிறுத்துங்கள்..மாற்றுத்திறனாளிகள் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2020, 1:48 PM IST
Highlights

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இப்படிப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 24 (1) படி 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும்,

பொங்கல் பரிசாக குடும்பத்திற்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இதுபோன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 24 (1)படி மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு 25% கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.அச்சங்கம் எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் பின் வருமாறு:  

2021 பொங்கல் பண்டிகையை சிறப்பாக  கொண்டாடிட ரூபாய்  2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார், ஆனால் (21-12-2020 அன்று) முன்கூட்டியே துவக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக பாதுகாப்பு திட்டம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளதையும், புயல் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் 2500 தொகை வழங்குவதற்கு காரணமாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை எந்த வார்த்தை சொல்லி அழைத்தாலும் இது ஒரு சமூகப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, விரிவாக்கத் திட்டம் என்பது வெளிப்படையானது.

தலைமைச் செயலாளருக்கு கடிதம்:

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இப்படிப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 24 (1) படி 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும், இந்த சட்ட சரத்தை அரசு முன்னெடுக்கும் வகையில் பொதுவாக அறிவித்துள்ள துறையை விட, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்கும் வகையில் இதற்காக வெளியிடப்படவுள்ள அரசாணையில் உத்தரவாதம் செய்யக்கோரி எமது சங்கம் சார்பில் (21-12 2020) கடிதம்  அனுப்பப்பட்டிருந்தது.

அரசாணையில் ஏமாற்றம்:

ஆனால் இத்திட்டத்திற்காக நேற்று வெளியிடப்பட்டுள்ள பார்வை 2ல் கண்ட அரசாணையில், மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமை குறித்து இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே கோரிக்கையை நிறைவேற்றவும், அதுவரை திட்டத்தை நிறுத்தி வைக்கவும் அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ளவும், உரிய உத்தரவுகளை பிறப்பிக்க தங்களை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!