
தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் இது தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மை காலமாக பாஜகவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு அருகே அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்தவர் ஞானசீனிவாசன். இவர், அப்பகுதியின் பாஜக நகர துணை தலைவராக இருந்து வருகிறார்.
மளிகை கடை மற்றும் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சென்ற மாதம் 5 ஆம் தேதி அவரது வீடு மற்றும் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதேபோல், கடந்த மே மாதம் நாகை, ஒழுகைமங்கலம், செம்பனார்கோவில் பகுதியில் பாஜக தலைவராக இருக்கும் பாலாஜி குருக்கள் வீட்டு முன்பு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
முன்னதாக கோவை மாவட்டம், போளுவாம்பட்டி பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரமேசை சிலர் அரிவாளால் வெட்டினர்.
இது போன்று பாஜகவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். என்றார்.இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்ந்தால், தமிழகம் கலவர பூமியாக மாறும்.என்று கூறியுள்ளார்.