
கருணாநிதி வைரவிழா அரசியலில் ஓரம் கட்டப்பட்டவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட விழா எனவும், அந்த விழா வைரவிழா அல்ல, வயதானவர்களுக்கான விழா எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் விழா மற்றும் வைர விழா நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொடர்புடைய மாநிலங்களின் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களுக்கு திமுக அழைப்பு விடுத்தது.
இதைதொடர்ந்து இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
அதில் பேசிய தேசிய தலைவர்கள் பாஜக குறித்தும் தமிழக ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினர்.
இதனிடையே மத்திய அரசின் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் களியல் சென்ற பொன். ராதாகிருஷ்ணன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் நடைபெற்ற கருணாநிதி வைரவிழா அரசியலில் ஓரம் கட்டப்பட்டவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட விழா எனவும், அந்த விழா வைரவிழா அல்ல, வயதானவர்களுக்கான விழா எனவும் தெரிவித்தார்.
மேலும், அந்த விழா மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன விழா என்றும், தமிழகத்தை மீண்டும் 50ஆண்டுகள் இருளில் தள்ள திராவிட கட்சிகள் செய்யும் முயற்சி பலிக்காது என்றும் தெரிவித்தார்.