
தமிழகம் அழிந்ததற்கு காரணம், திராவிட கட்சிகள் தான் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:-
கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி நடத்தி வருகிறது. இவர்கள் பேசி பேசியே மாநிலத்தை அழித்துவிட்டனர். விமான நிலையத்தில் பேசுவதற்காகவே ஒரு மத்திய அமைச்சர் உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவினர் யாருமே விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தது இல்லையா?
திமுக கொண்டு வரும் நல்ல திட்டத்தை அதிமுக புறக்கணித்தும், அதிமுக கொண்டு வரும் நல்ல திட்டத்தை திமுக புறக்கணித்தும் மாநிலத்தில் எந்த திட்டத்தையும் செய்ய முடியாத அளவுக்கு மக்களை பெரும் கவலையடைய செய்துள்ளனர்.
இதனை மாற்றி பாஜக பல திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை - குமரி, நாகர்கோயில் - திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கான இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் நிதி கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.