
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் பரப்பன ஆக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரான சசிகலா மீது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்த வழக்கை விசாரித்து வரும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் சசிகலாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே காணொலி காட்சி மூலம் ஆஜராவதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுகொண்ட நீதிமன்றம் இன்று காணொலி காட்சியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதனிடையே விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் கேள்விகளை முன்கூட்டியே அறிவிப்பது நீதிமன்ற மரபுகளில் கிடையாது என கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா காணொலி காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆஜராகினார். அவருடன் அவரது உறவினர் பாஸ்கரனும் நேரில் ஆஜரானார்.
சசிகலாவிடம் 50 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறையின் குற்றசாட்டுகளுக்கு சசிகலா மற்றும் பாஸ்கரன் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.