
கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரப்போகிறது என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல், வாக்குறுத்தி நிறைவேறவில்லை என்றால், ரகசியமும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதை உணர்த்தியுள்ளார் தோப்பு வெங்கடாச்சலம்.
கூவத்தூரில் எந்த ரகசிய பெறமும் நடக்கவில்லை. இது தொடர்பாக சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் விசாரித்தால் கூட எதிர்கொள்ள தயார் என்று, தினகரன் நேற்று பேட்டி அளித்தார்.
அடுத்த சில மணி நேரங்களில், கூவத்தூரில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், பேசப்பட்ட ரகசியங்கள் என்று சிலவற்றை கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலேயே போட்டு உடைத்தார் தோப்பு வெங்கடாச்சலம்
பெருந்துறையில் நேற்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கொட்டி தீர்த்த கூவத்தூர் ரகசியங்கள் பின் வருமாறு:-
கூவத்தூர் முகாமில் நாங்கள் இருந்த போது சசிகலாவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எங்களை சந்தித்தார்கள். அப்போது சில வாக்குறுதிகளை எங்களுக்கு அளித்தார்கள்.
அன்று நான் பழனிச்சாமியிடம் பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, சில இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை வைத்தேன்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறும் என்று கூறினார். நான் எந்த பதவியையும் கேட்காத போதே மாவட்டச் செயலாளர் பதவி தருவதாகக் கூறினார்.
அன்று கூவத்தூர் முகாமில் எனக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் முதல்வர் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.
நான் கூவத்தூர் முகாமில் இருந்த போது, எனக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான போன் கால்கள் வந்தன.
மறுமுனையில் இருந்து பேசிய அனைவருமே நூற்றுக்கு 99 பேர், நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி முகாமில் இருக்காதீர்கள். அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் தலைமையைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆகவே நீங்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்லுங்கள் என்று பலரும் வற்புறுத்தினார்கள். எனக்கு அப்போதே அதிமுக தொண்டர்களின் மனநிலை தெரிந்துவிட்டது.
மக்கள் மனநிலை ஓபிஎஸ்ஸையே விரும்புகிறது என்று எனக்கு புலப்பட்டது. ஆனாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டுவிட்டது.
அதிமுக ஆட்சி கலைந்துவிடக் கூடாது என்று எண்ணியே அந்த அணியில் நான் இருந்தேன்” என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏ க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, தொகுதி மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பன்னீருக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், அவர்கள் விருப்பத்திற்கு எதிராகவே எம்.எல்.ஏ க்கள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.