
வரும் ஜூலை 17ம் தேதி இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், பாஜகவை பொறுத்தவரை ஆட்சியை தக்க வைப்பதற்காக குடியரசு தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை அறிவித்துள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பாஜகவை பொறுத்தவரை அனைத்து மாநிலங்களிலும், மதவாதத்தை புகுத்தி வருகிறது. இந்தியாவில் மாநிலம் முழுவதும் ஆட்சியை அமைத்து, மத்திய அரசின் கொள்கைகளுக்கு பிடி கொடுக்காமல் இருந்தது மாயாவதி ஆட்சி செய்த உத்தரபிரதேசம் மட்டும்.
இந்தியாவில் தலித் மக்களின் ஆட்சி அமைத்தது, அந்த மாநிலத்தில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் தலித்துகளின் வாக்குகளை வைத்து, மற்ற கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன.
மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலும் தலித் மக்கள்தான் வாக்களித்துள்ளனர். இதை பின்பற்றியே, தற்போது பாஜகவும் தலித் என்ற போர்வையை போற்றி மக்களிடம் வாக்கு சேகரிக்க நினைக்கிறது. இதன் மூலம் அனைத்து கட்சியினரிடமும், தங்களது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.