“காவல்துறையே வாகனங்களை கொளுத்தியது ஏன்…?” – ம.ந.கூ. தலைவர்கள் சரமாரி கேள்வி

 
Published : Jan 24, 2017, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
“காவல்துறையே வாகனங்களை கொளுத்தியது ஏன்…?” – ம.ந.கூ. தலைவர்கள் சரமாரி கேள்வி

சுருக்கம்

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று அதிகாலை முதல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரவி பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

போலீசார், மாணவர்களை சரமாரியாக தாக்குவது, பெண்கள், சிறுவர்களை தாக்குவது, வாகனங்களை உடைத்து சேதப்படுத்துவது, தீயிட்டு எரிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், இதுபோன்ற காட்சிகள் மாஃபிங் செய்து இருக்கலாம். அப்படி இருந்தாலும் இதுவரை அதுபோன்ற வீடியோவை நான் பார்க்கவில்லை என கூறினார்.

இதனை கண்டித்து, மக்கள் நல கூட்டணி சார்பில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, போலீசார், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது, வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பது போன்ற காட்சிகள், திரையில் காண்பிக்கப்பட்டன. இதை தொடர்ந்து அவர்கள் பேசியதாவது:-

அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, வரும் 28ம் தேதி கோவை (வி.சி), மதுரை (இந்திய கம்யூனிஸ்ட்), சென்னை (மார்க்சிஸ்ட்) ஆகிய மாவட்டங்களில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

நேற்று தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய தடியடி காட்சிகளை பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்தோம். இதில் வாகனங்கள் ஏராளமாக எரிக்கப்பட்டன. அவற்றை சமூக விரோதிகள் செய்ததாக, மாநகர கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

ஆனால், நாங்கள் பார்த்த வீடியோ காட்சியில், போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். ஆனால், இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என கமிஷனர் கூறுவது விந்தையாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடந்த அசம்பாவித சம்பவத்துக்கு நியாயம் வேண்டும். காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களே தீயிட்டு எரித்துள்ளனர். போலீசார் நடத்திய சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.

எனவே கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு நியாயம் கேட்டு, நாங்கள் போராடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!