
எதற்கும் அஞ்சாமல், எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
தமிழக சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் தமிழக கவனர்னர் பர்னாலா, சோ.ராமசாமி, கோ.சி. மணி, பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் காலமான ஜெயலலிதாவின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் ஓபிஎஸ் முன்மொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் புகழாரம் சூட்டினர். அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்,எதற்கும் அஞ்சாமல், எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை, ஆளும் கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்த்த பாடுபட்டவர் ஜெயலலிதா. என்றும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை எண்ணிப் நான் பெருமைப்படுகிறேன் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழக நலனுக்காக இணைந்து பாடுபடுவோம் என்று தன்னிடம் ஜெயலலிதா கூறியதையும் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்,