
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கடந்த ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இரவு பகலாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கான வெற்றியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, தமிழக அரசு அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதை தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையில், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. இதை அறிந்ததும், மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் நடத்தப்பட்டது. இதனால், பெரும் போர்க்களமாக காட்சியளித்தது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று காலை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, திடீரென சந்தித்து பேசினார்.
சென்னை அடையாறு ராஜ்பவனி உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.