
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தை கைவிடும்படி, அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியபோதும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என திட்டவட்டமாக அறிவித்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு, பொதுமக்களின் ஆதரவும் பெருகியது.
இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த வெள்ளிக்கிழமை,டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து, அவசர சட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நிரந்தரமான சட்டம் வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், நேற்று 6வது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது,
இதையொட்டி நேற்று அதிகாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைய செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 2017ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன் தொடங்கியது. இதைதொடர்ந்துநேற்று மாலை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.
அப்போது, தமிழகத்தில் தடையில்லாமல் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.
இந்த தீர்மானத்தில், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக ஜல்லிக்கட்டு மீதான அனைத்து தடைகளையும் நீக்க வகை செய்யும் நிரந்தர சட்டம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.