
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆரம்ப்த்தில் போற்றி புகழப்பட்ட போலீசார் இன்று தூற்றப்படுகின்றனர். ஆனால் பல மாவட்டங்களில் போலீசாருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கிய நிகழ்வுகளும் நட்ந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மாணவர்களே தங்களுக்கான பாதுகாப்பை பார்த்துகொள்ள போலீசார் அவர்களுக்கு உதவ இவர்கள் அவர்களுக்கு உதவ தமிழகமே நெகிழ்ந்து போனது.
ஆனால் சென்னை , மதுரை , கோவை உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுடன் வெவ்வேறு அமைப்புகள் மாணவர் இளைஞர் போர்வையில் ஊடுருவினர். இதனால் கோஷங்கள் மாறின, போலீசாருடன் மோதினர், பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தனர், மீடியாக்களை தாக்கினர், தேச விரோத மத விரோத , தனி நாடு கோஷங்கள் எழுந்தன.
நாளுக்கு நாள் கோஷங்கள் மாறின போராடும் இளைஞர்களை மூளைச்சலவை செய்தனர். எடுத்து சொன்னவர்களும் அவமானப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு போராட்டகாரர்களிடம் விளக்கி கூறப்பட்டு கலைந்து போகச்சொல்லி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
புரிந்து கொண்ட இளைஞர்கள் , மாணவர்கள் கலைந்து சென்றனர். மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் மட்டும் போராட்டக்காரர்கள் போர்வையில் இருந்தவர்கள் கலையாத சில இளைஞர்களை வைத்து போராட்டம் நடத்தினர். இது வன்முறையாகவும் மாறியது.
ஆனால் இந்த மூன்று மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் பொதுமக்கள் மாணவர்கள் இளைஞர்கள் அமைதியாக போராட்டத்தை விட்டு விலகினர். அல்லது போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
திருச்சியில் மாவட்ட எஸ்பி மயில்வாகனனின் சிறப்பான அணுகுமுறையால் மாணவர்கள் , இளைஞர்கள் போலீசாரின் கோரிக்கையை ஏற்று தங்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்து கைகுலுக்கி விடை பெற்றனர்.
தங்கள் நோக்கம் நிறைவேறாமல் தனிமை படுத்தப்பட்ட கும்பல் தனியாக சாலைமறியல் செய்தனர். அவர்களுடனும் மயில்வாகனன் பேசி அமைதியாக கலைய வைத்தார்.
பெரம்பலூரில் மாணவர்கள் இளைஞர்கள் போலீசாருடன் இருந்த 6 நாட்கள் நட்பை எண்ணி கலங்கினர். போலீசாரை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.
சிவகாசி தேசியகீதம் பாடிய போராட்டகுழுவினர் தங்களுக்கு பாதுகாப்பு அளித்த போலீசார் , பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வேண்டுகோளை ஏற்று கலைந்து சென்றனர் , மேலூரில் மக்களுக்கு இனிப்பு வழங்கி போராட்டத்தை முடித்து கொண்டனர், தஞ்சை பட்டுக்கோட்டை போலீசார் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
புதுகோட்டை திலகர் திடலில் , சேலம் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் , தேனியில் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர், விருதுநகர் ராஜபாளையத்திலும் மாவட்ட எஸ்பி பேசி கலைந்து செல்ல வைத்தார்.
தமிழகம் முழுதும் இது போன்ற அனுபவங்கள் நெகிழ்ச்சியாக நடந்த நிலையில் சென்னையில் போராட்டக்காரர்கள் இடையே ஊடுருவிய அமைப்புகளால் வன்முறை , தடியடி பொதுச்சொத்துகள் சேதமடைந்தன.