
ஆர்.கே.நகர் தோல்விக்குப் பின்னர் கட்சியில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரை நீக்கி அதிமுக., கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, “கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர், பலவீனமான இந்த மனிதர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். துணிச்சல் அற்றவர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிர்ச்சியடைந்து இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.” என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதில் துணிச்சல் அற்றவர்கள் என்று பொருள் படும், ஆண்மையற்றவர்கள் என்ற சொல்லால் அதிமுக., தலைவர்களை இழிவு படுத்தியதாக, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மீது பாய்ந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
அவர் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆண்மை இல்லதவர்கள்தான் ஆண்மையைப் பற்றி பேசுவார்கள் என பதில் அளித்தார்.
மேலும், குருமூர்த்தி தனது வார்த்தையை திரும்பப் பெறாவிட்டால் அதற்கான விளைவுகளை அவர் அனுபவிக்க நேரிடும் என எச்சரித்தார். குருமூர்த்தி ஒரு
படித்த முட்டாள் எனவும் காட்டத்துடன் விமர்சித்தார். அவர் எல்லையை உணர்ந்து பேச வேண்டும். அவசியம் என்றால் ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடருவது பற்றி பரிசீலிக்கப்படும். இழி சொல்லை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி தனது டிவிட்டர் பதிவில், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது கருத்துகளை தொடர்ந்து தெரிவிப்பேன். ஏனென்றால் நான் ஒரு சுதந்திரமான எழுத்தாளர் என்று குறிப்பிட்டார். மேலும், நான் தமிழக அமைச்சருக்கு நன்றி செலுத்த கடன் பட்டிருக்கிறேன். எடப்பாடி, ஓபிஎஸ் அரசு, என் ஆலோசனையைக் கேட்டுதான் செயல்படுவதாகக் கூறப்படுவது தவறு என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். நான் அவர்களின் அரசுக்கு எப்போதுமே அறிவுரை கூறியது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் எஸ்.குருமூர்த்தி.
நான் அடிக்கடி என் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் எடப்பாடி அரசு குறித்து அடிக்கடி குறிப்பிடும் வார்த்தைகள் தான் அவை. இதில் புதிதாக எதுவும் இல்லை. அதிமுக., தலைமை என்பது எவ்வளவு பலவீனமாக இருக்கின்றது என்று கூறியவைதான் அவை. மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக தவணை முறையில் நடவடிக்கை எடுத்ததும், திடுக்கிடும் வகையில் அதிமுக தலைமை மேற்கொண்ட நடவடிக்கைதான். ஆர்.கே.நகர் தேர்தலில் அரசின் காவல் துறை, எந்த வகையிலும் மன்னார்குடி ஆதரவாளர்கள் பண விநியோகம் செய்வதை தடுக்க முடியாமல் அவர்களைப் பிடிக்க முடியாமல் விட்டது. ஆனால், அதற்கு பதிலாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் இறங்கியது... - என்று குறிப்பிட்டுள்ளார் எஸ்.குருமூர்த்தி.