24 மணி நேரமும் மது விற்பனை.. மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா? அன்புமணி வெளியிட்ட பகீர் தகவல்

By Raghupati R  |  First Published Jun 5, 2023, 7:42 PM IST

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் நண்பகல் 12. 00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 10 மணி நேரம் மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அனைத்து மதுக்கடைகளிலும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுக்கடையில் நேற்று அதிகாலை மது வாங்கிய செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயி அதில் நஞ்சு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நண்பகல் 12.00 மணிக்குத் தான் மதுக்கடை திறக்கப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கும் நிலையில், காமநாயக்கன்பாளையம் மதுக்கடையில் அதிகாலை முதலே மது விற்பனை நடந்து வருகிறது. அது தான் உழவர் கணேசனின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 10 மணி நேரம் மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அனைத்து மதுக்கடைகளிலும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டில் 5329 மதுக்கடைகள் உரிமம் பெற்று இயங்கினால், சுமார் 25,000 மதுக்கடைகள் சந்துக்கடைகள் என்ற பெயரில் சட்டவிரோதமாக நிறுவனம் வருகிறது. இதை பாமக பலமுறை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த பயனும் இல்லை. மரக்காணம் கள்ளச்சாராய சாவு, தஞ்சாவூரில் சயனாய்டு கலந்த மதுவால் இருவர் உயிரிழப்பு ஆகியவற்றுக்குப் பிறகு சட்டவிரோத மதுக்கடைகள் மீது ஆங்காங்கே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகும் கூட திருப்பூர் மாவட்ட மதுக்கடைகளில் அதிகாலையிலேயே மது விற்கப்பட்டது என்பது விதிகளையும், விமர்சனங்களையும் பற்றி மதுவிலக்குத்துறை அமைச்சரும், டாஸ்மாக் நிறுவனமும் கவலைப்படவில்லை என்பது தானே? தஞ்சாவூரில் கடந்த மே 21ஆம் தேதி மதுக்கடை ஒன்றில் விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டு இருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.  அதுகுறித்து உள்ளூர் காவல்துறையும், சிபிசிஐடி காவல்துறையும் விசாரணை நடத்தினர். ஆனால், இன்றுடன் 16 நாட்களாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சயனைடு கலந்தவர்கள் யார் ? கண்டறிய முடியவில்லை. அப்படியானால், மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா அல்லது மதுவே நஞ்சாக இருந்ததா ? இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

மதுக்கடைகளாலும், அதை நிர்வகிக்கும் அமைச்சராலும் தமிழக அரசுக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுவதை தமிழக முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும். சட்டவிரோத மதுக்கடைகளுக்கும், மது வணிகத்துக்கும் தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டிற்குள் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் வசதியாக மதுவிலக்குத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்

click me!